சிகப்பு அரசியல் பேசும் நடிகர் ஜீவாவின் ‘ஜிப்சி’ டீசர்

சிகப்பு அரசியல் பேசும் நடிகர் ஜீவாவின் ‘ஜிப்சி’ டீசர்
சிகப்பு அரசியல் பேசும் நடிகர் ஜீவாவின் ‘ஜிப்சி’ டீசர்

சிகப்பு அரசியலை அனலாக தெரிக்க விடும் ‘ஜிப்ஸி’ டீசர் வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஜிப்ஸி’. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் கடந்த வருடம் வெளியானது. ட்ரெய்லரின் முதல் பாதி காதலும் பயணமுமாக சென்ற நிலையில், அடுத்த பாதி அரசியல் நிகழ்வுகளை பேசி இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்சியளித்த ஜீவா, காதல் காட்சிகளிலும், மக்கள் பிரச்னைக்கு ஆதரவாக போராடும் காட்சிகளிலும் நடித்திருந்தார்.

குறிப்பாக ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் மத்திய அரசின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்திருந்தது. மேலும் அரசுக்கு எதிராக மக்கள் எப்படி போராட வேண்டும் போன்ற கருத்துகளையும் பேசி இருந்தது. அதேபோல யுகபாரதியின் பாடல் வரிகளிலும் அரசியல் கருத்துகளால் நிரம்பி வழிந்தது. ட்ரெய்லரை அடுத்து இப்படத்திலிருந்து ஒரு பாடலை படக்குழு வெளியிட்டது. very very bad என்ற அந்தப் பாடல் பலரது கவனத்தை கலைத்திருந்தது.

இந்தப் பாடலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, திருமுருகன், பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், நடிகர் ஜீவா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். அரசியல் போராட்டக் களத்தில் இயக்கி வரும் இவர்கள் ஒரு திரைப்பட பாடலில் இடம் பெற்றிருந்தது இதுவே முதன்முறை என்பதால் மேலும் பலரது பார்வையையும் இந்தப்பாடல் ஈர்த்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் டீசர் இன்றைக்கு நடந்து வரும் டெல்லி கலவரத்தை ஒத்ததைப்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய காட்சி அமைப்புகள் தற்போதைய சூழலை எடுத்து கூறும் விதமாக இருக்கிறது.

டீசரின் தொடக்கமே “லீடர் ஜீ-க்கு ஜெய்கோ” என்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறது, கூடவே இஸ்லாமியர்களின் தொழுகை சத்தம் பின்னணி ஒலிக்கிறது. அதன் பின்னர் உன்னுடைய அடையாளம் என்ன என்று ஒருவர், படத்தின் நாயகன் ஜீவாவைக் கேட்க, அதற்கு அவர் ‘நான் மனுசன்’ என்று கத்துகிறார்.

அதன் பின்னர் காதல் காட்சிகளில் நுழையும் டீசர் ‘ஜிப்ஸி’யாக திரியும் ஜீவாவுக்கும் இஸ்லாமிய பெண்ணிற்கு இடையேயான காதலை
திரையில் மிளிர வைத்தது. டீசரை பார்க்கும் போது ஜீவாவின் காதலியான இஸ்லாமிய பெண்ணிற்காக பலர் பிரச்னைகளை எதிர்கொள்ளும் இளைஞனாக ஜீவா வருவார் என யூகிக்க முடிகிறது.டீசரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நாயகி “இந்தியா எங்க ஆளு.. இதுதான் எங்கள் நாடு.. நீங்க எல்லாம் என்ன லூசா” என்று கேள்வி எழுப்புகிறார்.

அதன் பின்னர் மதவாதிகளின் அடக்குமுறைக்கு உள்ளாகும் நாயகி, இவரைக் காக்க களத்தில் குதிக்கும் நாயகன் ஜீவா என டீசர் முழுக்க சிகப்பு அரசியல் அனலாக பேசப்பட்டுள்ளது. இத்தனையையும் கடந்து தெருக்குரல் இசைப் பாடகர் அறிவின் வரிகளில் உருவான வியாதி என்ற பாடலுடன் நிறைவடைகிறது டீசர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com