”இந்தியாவை ’United States of India’ என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்”-இயக்குநர் ரத்னகுமார்

”இந்தியாவை ’United States of India’ என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்”-இயக்குநர் ரத்னகுமார்
”இந்தியாவை ’United States of India’ என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்”-இயக்குநர் ரத்னகுமார்

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘குலு குலு’ திரைப்படத்தின் காட்சியை சென்சார் போர்டு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் நீக்கியிருந்தது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்ற ஆந்தாலஜி படத்தில் ‘மது’ என்ற சிறுப் பகுதியை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.எம். ரத்னகுமார். அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ என்றத் திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித் திரையில் அறிமுகமான இயக்குநர் ரத்னகுமார், அமலா பாலின் ‘ஆடை’, சந்தானத்தின் ‘குலு குலு’ ஆகியப் படங்களை இயக்கியிருந்தார்.

மேலும் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகியப் படங்களில் வசனக்கர்த்தாவாகப் பணியாற்றிய ரத்னகுமார், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திலும் எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். ரத்னகுமாரின் ‘குலு குலு’ படம் தெலுங்கிலும் வெளியாகி இருந்த நிலையில், அதில் ‘இந்திய பிரதமர்’ என குறிப்பிடப்படும் ஒரு காட்சியை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் எந்தவித விளக்கமும் இன்றி நீக்கியிருந்தது.

இது செய்தியாக வெளியாகியிருந்தநிலையில், அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரத்னகுமார், "திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்றது. ‘குலு குலு’ படத்திற்கு நடந்தது என்பதால் மட்டும் நான் இதை சொல்லவில்லை.

ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக இருப்பது கலை. அதன்மீதே இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறீர்கள். தமிழ்நாட்டை, தமிழகம் என மாற்ற முயல்வதற்குப் பதில், இந்தியாவை United States of India என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பாலிவுட்டில் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படத்திலும் 'இந்தியப் பிரதமர்' என்று குறிப்பிடும் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com