பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு
மன்னர் ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒரு இருண்டகாலம் என்றும், சாதிய ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கியது என்றும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதனையடுத்து, கலகத்தை தூண்டும் வகையிலும், சாதி, மதம், மொழி ரீதியாக மோதலை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன.
இதனையடுத்து, வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பா.ரஞ்சித் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கொண்டே தாம் அவ்வாறு பேசியதாகவும், தமது பேச்சு எத்தரப்பு மக்கள் இடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை என்றும், எனவே இவ்வழக்கில் தமக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இம்மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கையில், மக்கள் கொண்டாடும் மன்னர் ஒருவரை இவ்வாறு பேசுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். இதுபோன்று பேசுவதை மனுதாரர் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இதையடுத்து வாதிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில், வரும் புதன்கிழமை வரை பா.ரஞ்சித் கைது செய்யப்பட மாட்டார் என அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.