வெளியான Good Bad Ugly படத்தின் புது லுக்... ‘கடவுளே அஜித்தே’க்கு NO.. ‘அழகே அஜித்தே’க்கு YES..!
மாஸ் ஹீரோக்களை பொறுத்த வரை அவர்களின் தோற்றம் முதல் ஹேர் ஸ்டைல் வரை பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. ஆனால், அந்தக் கருத்து அஜித்தை பொறுத்தவரை மாறும். அவரது ஒவ்வொரு மாற்றமும் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படும், பின்பற்றப்படும். கடவுளே அஜித்தே என கத்திக் கொண்டிருந்த ரசிகர்களின் கோஷத்தை, அழகே அஜித்தே என மாற்ற வைத்துள்ளது, குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புது தோற்றம்.
ஆரம்ப காலங்களில் அஜித் தனது தோற்றம் சார்ந்து பெரிய மாறுதல்கள் செய்ததில்லை என்றாலும், தீனா படத்திற்குப் பிறகு தனது தோற்றத்தை கலைந்த தலைமுடி, டிரிம் செய்த தாடி, மீசை என வந்து அசத்தினார். பின்பு சிட்டிசன் படத்தில் பல கெட்டப்கள் போட்டு வந்தது அப்போது பெரிதாக பேசப்பட்டது. தொடர்ந்து அஷோகா படத்தில் நீளமான முடியுடன் வந்தது, ரெட் படத்தில் ஸீரோ டிரிம் அடித்து மொட்டை தலையுடன் வலம் வந்ததுகூட குறிப்பிட வேண்டியவை.
ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் தனது தோற்றத்தில் அஜித் ஏதாவது மாற்றம் செய்து கொண்டே இருந்ததை கவனிக்க முடியும். ஜி படம் வரை நார்மலாக இருந்தவர், பரமசிவன் பட சமயத்தில் பயங்கர எடை குறைப்பு செய்து செம டிரிம்மாக வந்தார்.
மாஸ் ஒருபக்கம் இருந்தாலும், அஜித்தை ஒரு ஸ்டைலிஷ் நபராக காட்டிய பெருமை விஷ்ணு வர்தனையே சாரும். பில்லா படத்தில் கோர்ட் சூட் போட்டு மாஸ் + ஸ்டைலாக வந்த அஜித்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இதன் பிறகு அஜித்தின் உடல் எடை குறித்த சில மலினமான கிண்டலும் கேலியும் அதிகமாக வந்ததையும் குறிப்பிட வேண்டும். ஏகன், அசல் என இரு படங்களிலும் அஜித் உருவம் பெரிதாக கேலி செய்யப்பட்டது.
இதை எல்லாம் மனதில் எடுத்துக் கொண்டாரோ என்னவோ, திரும்பி வரும் போது எல்லோரும் அசர வேண்டும் என மெனக்கெட்டார். இப்போதும் அஜித் என சொன்னால் பலருக்கும் அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக் சட்டென நினைவுக்கு வரும். அந்த ஹேர் ஸ்டைலுடன், செம கெத்தாக மங்காத்தாவில் என்ட்ரி கொடுத்தார் அஜித்.
அதன் பின் ஆரம்பம் படத்தில் இன்னும் கூல் லுக், என்னை அறிந்தால் படத்தில் க்ளீன் ஷேவ் செய்து ஸ்மார்ட் லுக், வேதாளம் படத்தில் தர லோக்கலாக ஒரு டான் லுக், விஸ்வாசம் படத்தில் முரட்டு மீசையுடன் மிரட்டல் லுக் என பல வித்தியாசங்கள்.
அதன் பின்னரும் துணிவு படத்தில் தலை முடி, தாடி, மீசை என ஒயிட் அன்ட் ஒயிட் லுக்கிலும் க்ளாசாக வந்தார். இப்போது தயாராகி வரும் விடாமுயற்சி படத்தில் சமத்தாக இரண்டு லுக் தான். ஆனால் ரசிகர்களை அசர வைக்க குட் பேட் அக்லி படத்தில் பல சம்பவங்கள் இருக்கிறது என்பதை, அப்படத்தின் ஸ்டில்ஸ் பார்க்கும் போதே தெரிகிறது.
முதலில் கோட் சூட், டாட்டூ என மாஸ் லுக்கில் இருந்த அஜித் புகைப்படங்கள் ஆல்ரெடி வைரல். ஆதிக் ஒரு ஃபேன் பாய் சம்பவம் செய்திருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ந்து வரும் வேளையில் இன்று இன்னொரு சர்ப்ரைஸ் வந்திருக்கிறது. க்ளீன் ஷேவில் செம ஸ்மார்ட்டாக ஒரு போட்டோ வெளியாகியிருக்கிறது. என்னதான் படம் வெளியாக கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும், படத்தில் தன்னை ஃப்ரெஷ்ஷாக காட்டிக்கொள்ள அஜித் எடுக்கும் முயற்சிகள் பாராட்ட வேண்டியதே.