ஓடிடி திரைப் பார்வை: Gohin Hridoy - உறவுச் சிக்கல்களை உணர்வுபூர்வமாக அணுகும் பெங்கால் படம்

ஓடிடி திரைப் பார்வை: Gohin Hridoy - உறவுச் சிக்கல்களை உணர்வுபூர்வமாக அணுகும் பெங்கால் படம்

ஓடிடி திரைப் பார்வை: Gohin Hridoy - உறவுச் சிக்கல்களை உணர்வுபூர்வமாக அணுகும் பெங்கால் படம்
Published on

"பாஷருக்கு ஒரு கிரியேட்டிவிட்டி இல்ல. ரொமாண்டிக் ஐடியாஸ் இல்ல. அவர் ஒரு சராசரி பெங்காலி குடும்பத்தலைவர் அவ்ளோ தான். இதெல்லாம் எனக்கு போதாது. அதான் அவர விவாகரத்து செய்யப் போறேன்." பாஷர் குறித்து அவரது மனைவி சோஹினி தன் வழக்கறிஞரிடம் பேசும் இந்த இந்த வசனம் தான் படத்தின் முதல் காட்சி. இந்த முதல் காட்சியிலேயே சோஹினி சராசரி குடும்ப வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைக்கும் நவீன சிந்தனை கொண்ட பெண் என புரிந்துகொள்ளலாம். 12 வயது மகனின் தாயான அவரது இந்த எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பது தான் 2018ல் வெளியான Gohin Hridoy எனும் இந்த பெங்காலிப் படத்தின் திரைக்கதை.

சோஹினியின் கணவர் பாஷர் ஒரு சராசரி குடும்பத் தலைவர். சோஹினிக்கும் பாஷரின் நண்பர் அனுபமிற்கும் இடையே காதல் இருக்கிறது. அனுபம் ஏற்கனவே விவாகரத்தானவர். அனுபம் தான் தன்னுடைய வாழ்வியல் முறைக்கும், ரசனைகளுக்கும் ஏற்றவர் என நம்புகிறாள் சோஹினி. அதனால் தான் சோஹினி பாஷரை விவாகரத்து செய்துவிடும் முடிவுக்கு வருகிறாள். அனுபமும் சோஹினியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலிக்கின்றனர். இருவரும் சேர்ந்து தமக்குள் இருக்கும் உறவு குறித்து பாஷரிடம் சொல்லிவிடுவது என முடிவு செய்கின்றனர். பாஷரை விவாகரத்து செய்துவிட்டு சோஹினி அனுபமுடன் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்கிறார். அப்படியொரு முடிவினை எடுக்கும் தருணம் பாஷருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதுவரை இருந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது. கணவரின் துன்பநிலையும், தன்மகன் நோயில் துடிக்கும் சமயத்தில் சோஹினியின் எதிர்காலம் குறித்து அவரது மாமியார் வருத்தப்படும் விசயமும் சேர்ந்து சோஹினியின் முடிவு குறித்து அவரை மறுவிசாரணை செய்யவைக்கிறது.

தற்போது இப்படம் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது. இப்படத்தில் சோஹினி, பாஷர், அனுபம், பாஷரின் அலுவலக நண்பர்கள், சோஹினியின் மாமியார் உட்பட யாருமே எதிர்மறை கதாபாத்திரங்கள் இல்லை. அவரவருக்கு ஒரு நியாயமிருக்கிறது. அவரவருக்கு ஒரு விருப்பமிருக்கிறது. ஆனால் தனிமனித விருப்பங்கள் அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாதுதானே.? சமகால சமூக கட்டமைப்பினை நாம்தான் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றாலும் அதனை அத்தனை சுலபமாக நாம் உடைத்து வெளியேறி விட முடியாதுதானே.? இந்த விவாதங்களைத்தான் முன்வைத்துப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் Agnidev Chatterjee.,

ஆனால் கருத்துப் போதாமையின் காரணமாக எங்கோ அவர் இந்த அழகான கதையினை சரியாக விவாதிக்க முடியாமல் போயிருக்கிறார். படத்தின் துவக்க காட்சி வலுவானதாக இருக்கிறது. இப்படம் மனித உறவுகள் குறித்து பெரிய விவாதத்தை, குடும்பம் என்கிற அமைப்பு பற்றி உறுதியான வாதத்தை முன்வைக்கவிருக்கிறது என்று நினைத்து படத்தை பார்க்கத் துவங்கினால் அது பாஷரின் ப்ரைன் டியூமரில் திசைமாறிப் போய்விடுகிறது.

மொத்தமாக இந்தக் கதையினை புறந்தள்ளிவிட முடியாது. இது எடுத்துக் கொண்ட கதைக்களம் கொஞ்சம் ஆபத்தானது. ஆனாலும் இதனை மிகத்துணிச்சலுடன் கையாண்டிருக்கிறார் இந்த சினிமாவின் இயக்குனர் Agnidev Chatterjee. இவருடைய மனைவி Sudipa Chatterjee எழுதிய நாவலைத்தான் Agnidev Chatterjee சினிமாவாக இயக்கியிருக்கிறார்.

இந்த சினிமாவில் சமகால நிகழ்வுகளை கருப்பு வெள்ளையாகவும் குறியீட்டுப் பகுதிகளை கலரிலும் காட்டி இருக்கிறார் இயக்குநர் Agnidev Chatterjee. இவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட. இந்த கருப்பு வெள்ளை ஐடியா வொர்கவுட் ஆகி இருக்கிறது. இதற்கு முன் Dark Chocolate, A Political Murder ஆகிய சினிமாக்களையும் Agnidev Chatterjee இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்த சினிமாவின் ஒரு காட்சியில் சோஹினி தன் காதலர் அனுபமிடம் “நான் ஒருத்தரோட, மனைவி, ஒருத்தரோட மகள், ஒரு சிறுவனின் தாய், ஒருவரின் மருமகள், ஒருவரின் காதலி.அப்போ நான் யார்.? எனக்குனு ஒரு அடையாளமும் இல்லையா...?” என்கிறார். மிகச்சரியாக காட்சியில் வைக்கப்பட்டிருக்கு மிகப்பொறுத்தமான வசனம் அது. நீண்டகாலமாகவே பெண்களின் அடையாளப் பறிப்பு குறித்த விவாதங்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. அதனை சோஹினியின் வார்த்தைகள் வழிமொழிகின்றன.

தான் வாழ விரும்பும் வாழ்க்கை அமையாமல் ஏங்கித் தவிக்கும் சோஹினியின் கதாபாத்திர வடிவமைப்பு ஆழம். அனுபமை திருமணம் செய்துகொள்ள நினைக்கிற சோஹினியின் எண்ணங்கள் மடைமாறி நீர்த்துக் போகும் இடங்களும் அருமை. சோஹினியின் கதாபாத்திரத்தில் Rituparna Sengupta நடித்திருக்கிறார். சராசரி இந்தியக் குடும்பங்களில் ஆணும் பெண்ணும் தன் அன்புக்குறிய நண்பர்களிடம் “அவர் எனக்கு பொறுத்தமானவர் இல்லை, அவள் எனக்கு பொறுத்தமானவள் இல்லை” என்று சொல்லும் பரஸ்பர புகார்கள் தான் இப்படத்தின் கதைக்கருவாகவும் இயங்கி இருக்கிறது.

உண்மையில் நாம் நினைப்பது போலோரு ரெடிமேட் சட்டை கிடைக்கலாம். ஆனால் ரெடிமேட் மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை. நீங்கள் விரும்பும் நீள அகலத்தில் ஒரு மனிதனை ஆர்டர் போட்டு செய்திட முடியாது. கணவனோ, மனைவியோ, தாயோ, தந்தையோ, காதலியோ, காதலனோ இயற்கையின் நியதி எதுவோ அதன்படியே நமக்கு உறவுகள் அமைகின்றன. இதனை புரிந்து கொள்கிறபோது இந்தியக் குடும்ப கட்டமைப்பில் உறவுச்சிக்கல்கள் குறையும். வாழ்வென்பது The Perfect மனிதர்களை தேடிக் கண்டடைவது அல்ல. The Perfect என்பதே ஒரு வகையில் அசவுர்கர்யம் தானே. வளையும் நாணல்கள் புயலிலும் வாழும், வளையாத மின்கம்பங்களே சாயும்.

Gohin Hridoy என்கிற இந்த பெங்காலி மொழி சினிமாவானது உறவுச் சிக்கல்கள் குறித்தும், தனிமனித விருப்பங்கள் குறித்தும், குடும்ப அமைப்பு குறித்தும் நம்மை விவாதிக்க வைக்கிறது.

- சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com