’அண்ணாமலை வந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ பிரச்னை; இனி பாஜக கிடையாது’ - காயத்ரி ரகுராம்

’அண்ணாமலை வந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ பிரச்னை; இனி பாஜக கிடையாது’ - காயத்ரி ரகுராம்
’அண்ணாமலை வந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ பிரச்னை; இனி பாஜக கிடையாது’ - காயத்ரி ரகுராம்

இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன் என்றும், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன் எனவும் நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்டார்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் எனவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார். ஆனால் ‘தன் மீது அன்பு கொண்டவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், அதை யாராலும் நிறுத்த முடியாது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், நாட்டுக்காக உழைப்பேன்’ எனத் தெரிவித்திருந்தார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பா.ஜ.க.வில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க.வின் உண்மை தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்” நீண்ட விளக்கத்துடன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம், “விசாரணை இல்லாமல் என்னை தற்காலிகமாக நீக்கியுள்ளனர். என்னை நீக்கியதற்கான காரணத்தை இரண்டு மாத காலமாகியும் சொல்லவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக பல பிரச்சினைகளை சந்தித்து வந்தேன். அதற்காண விசாரணை முறையாக நடைபெறவில்லை.

அண்ணாமலை தலைவராக வந்தப்பிறகு தான் பெண்களுக்கு பிரச்சினைகள் வருகிறது. இதற்கு முன்னர் வீடியோ ஆடியோ பிரச்சினை பா.ஜ.க. வில் எப்போது வந்தது. தமிழிசை இருந்தப் போதிலும், எல்.முருகன் தலைவராக இருந்தப்போதிலும் இது போன்ற பிரச்சினை வந்ததது இல்லை.

நான் கலகம் செய்து விட்டேன் என்று சொல்கிறார். இவர் எவ்வளவோ கலகம் செய்து வருகிறார். நான் தவறு செய்தால் என்னிடம் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். அண்ணாமலை எப்போதுமே ஆதாரம் இல்லாமல் தான் பேசுகிறார். இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com