“நிறைய உழைத்து, பணம் செலவிட்டு திரைப்படங்களை எடுக்கும் நிலையில், செல்போனில் அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் படக்காட்சியை பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் அண்மையில் திரைக்கு வந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே ' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறித்து பேசினார்.
அப்போது அவர், “ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் அமைந்திருந்தபோதும், ஒரு பெண் மட்டும் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்களும் இடம்பெறும் வகையில் அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால் சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து நடனமாடும் வகையில் அந்த பாடலை எடுத்தோம். வழக்கமான முறையிலேயே சிந்திக்காமல் மாற்றி சிந்தித்து படைப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார்.
மேலும் பேசுகையில், “திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போர் 15 - 20 விநாடிகள்வரை திரைப்படத்தின் காட்சியை படம் படித்து அதை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அது தவறு. படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைத்தால் திரையரங்கில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால் படக் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவறான செயல்.
ஏனென்றால் ஒரு திரைப்படம் எடுக்க நாங்கள் நிறைய உழைப்பை, நிறைய நேரத்தை, நிறைய பணத்தை செலவிடுகிறோம். அதை வீணாக்கும் வகையில் அலைபேசயில் சிலர் படக் காட்சியை பதிவிட்டு சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்” என்று கூறினார்.