“எல்லாமே எங்களுக்கு எதிரா ஆனபோதும்...” - ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் உருக்கம்!

துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போகும் நிலையில், ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமான பதிவு.
துருவ நட்சத்திரம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன்
துருவ நட்சத்திரம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன்PT

விக்ரம் நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், இது தொடர்பாக ரசிகர்களுக்கு கௌதம் வாசுதேவ் மேனன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “ஒரு பார்வை. நிறைய Passion. இவற்றோடு எங்களின் அர்ப்பணிப்பு. இவற்றினால்தான் துருவ நட்சத்திரம் படம் இன்று உருவாகியுள்ளது.

எல்லாமே எங்களுக்கு எதிராக மாறியபோதிலும் எங்களது ஆர்வமும் அர்ப்பணிப்பும் நிச்சயம் இத்திரைப்படத்தினை விரைவில் உலகளவில் திரையரங்குகளில் கொண்டுவந்து சேர்க்கும் என்று நம்புகிறோம்.

நவம்பர் 24 ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தோம். மலையையே நகர்த்தும் அளவுக்கு அதற்காக முயற்சியும் செய்தோம். ஆனாலும் எங்களது பெரும் முயற்சிகளை அளித்தும் திரைப்படத்தினை வெளியிடமுடியவில்லை. அதில் எங்களுக்கு வருத்தமில்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். இருப்பினும் நாங்கள் இந்த திரைப்படத்தினை திரையரங்குக்கு கொண்டுவரும் முயற்சியிலிருந்து பின்வாங்கிவிடவில்லை. அதை சொல்வதற்காகவே இந்த பதிவு. எல்லா தடைகளையும் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட எங்களால் முடிந்த, எங்கள் சக்திக்கு மீறிய அனைத்தையும்கூட செய்து வருகிறோம்.

துருவ நட்சத்திரம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன்
“துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட முடியவில்லை; மன்னிக்கவும்” - கௌதம் வாசுதேவ் மேனன் வருத்தம்!

பார்வையாளர்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து வரும் தீராத அன்பும் ஆதரவும் எங்களை மேலும் வலுப்படுத்துகிறது. உங்கள் அன்பால் எங்களது இதயங்கள் நிறைந்துள்ளன. நீங்கள் எங்களின் வலிமையின் தூணாக இருப்பதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க, இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ​​எங்களின் படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். படம் ரிலீஸாகி, உங்களோடு படத்தை பகிர்ந்துக்கொள்ளும் நாளுக்காக இதற்கு மேலும் காத்திருக்கமுடியாது எங்களால்!” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிம்புவை நாயகனாக வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்குவதற்காக கௌதம் வாசுதேவ் மேனன் ‘ஆல் இன் ப்ட்சர்ஸ்’ நிறுவனத்தில் வாங்கிய அட்வான்ஸ் தொகையை, சரியாக திருப்பிக் கொடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com