கவுரி லங்கேஷூக்கு முன் பிரபல நடிகருக்கு குறிவைத்த கொலையாளிகள்!
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷூக்கு முன் பிரபல நடிகரைச் சுட்டுக்கொல்ல கொலையாளிகள் தீட்டிய திட்டம் இப்போது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வுப் படை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பரசுராம் வாக்மோரே, நவீன்குமார், அமோக்காலே, அமித்தேக்வேகர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமோல் காலே என்பவரிடம் இருந்து டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் இந்து மதத்துக்கு எதிராகச் செயல்படும் பலரின் பெயர்களை எழுதி கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதில், பெரும்பாலானவர்கள் மகாராஷ்ட்ரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். முதல் இடத்தில் பிரபல நடிகரும் செயற்பாட்டாளருமான கிரீஷ் கர்நாட் உள்ளார். இவர், தமிழில், செல்லமே, ஹே ராம், மின் சாரக் கனவு, ரட்சகன், காதலன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இரண்டா வது இடத்தில் கவுரி லங்கேஷ் இருந்துள்ளார்.
இதையடுத்து அந்த டைரி குறிப்புகளை கொண்டு போலீசார் அமோல் காலேவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.