”நல்ல கவிஞர்தான்; ஆனா நல்ல மனிதன் இல்லை?” | சின்மயி-க்கு ஆதரவாக வைரமுத்துவை சாடிய கங்கை அமரன்!
2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் #metoo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண்கள் சிலர், தங்களுடைய பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதற்கு பெருத்த ஆதரவு எழுந்தது. அதேநேரத்தில், ஒருசில எதிர்ப்புகளும் இருந்தன.
இந்த நிலையில்தான், அதே ஆண்டு பிரபல பின்னணிப் பாடகி சின்மயியியும், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் ரீதியாகக் குற்றாஞ்சாட்டியிருந்தார். இது, தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சியடையச் செய்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் வைரமுத்து பொய் சொல்கிறார் என சின்மயி மீண்டும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் சிலர் சினமயிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அதே சமயத்தில், வைரமுத்து மீது வீணாக பொய்பழி சுமத்துகிறார் என பலர் சின்மயியை கண்டித்தனர். இன்னும் பலரோ, ஆதரவும் தெரிவிக்காமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவிட்டனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வைரமுத்து தமிழ்த் திரையுலகத்தால் ஓரங்கட்டப்பட்டார். அதேபோல், டப்பிங் யூனியனில் இருந்தும் சின்மயி தூக்கப்பட்டார். ஆனால் அதற்கு வேறு காரணங்கள் கூறப்பட்டது. தவிர, பாடுவதற்கும் வாய்ப்புகள் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் பாடகி சின்மயியுடன் பாடலாசிரியர் கங்கை அமரன் கலந்துகொண்டார். அப்போது, அவரிடம் MeToo விவகாரத்தில் சின்மயியை பலரும் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கங்கை அமரன், “ஏம்மா இப்படி வைரமுத்துவை பற்றித் தவறாக பேசுற? அவர் தங்கமான ஆளு. அப்படிப்பட்ட ஆள் மேல நீ குற்றம் சொல்லலாமா? அவர் எப்படிப்பட்ட உத்தமமான ஆளு? அதிசயப் பிறவியான ஆளு” எனச் சிரித்தப்படியே கூறினார். பின்னர் மீண்டும் பேசிய அவர், “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை” என்றார். சின்மயிக்கு ஆதரவாக கங்கை அமரன் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஒவ்வொரு முறையும் இணையதளங்களில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாவார். இவ்விவகாரம் குறித்து, கவிஞர் வைரமுத்துவும் இளையராஜாவை மறைமுகமாகச் சாடியிருந்தார்.
இதற்கு இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனும் வைரமுத்துவுக்குப் பதிலடி கொடுத்திருந்தார். தற்போதும் அதைக் கருத்தில்கொண்டே சின்மயிக்கு ஆதரவாகப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அதே வைரமுத்துதான், சமீபத்தில் தன் பாடலின் வரிகள் படங்களின் தலைப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு யார் காப்புரிமை தருவது என இளையராஜாவுக்கு ஆதரவாய்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.