“அவரைப் புறக்கணித்துவிடு..” வெங்கட்பிரபுவுக்கு கங்கை அமரன் சொன்ன அட்வைஸ்.. யாரைச் சொல்கிறார்?
பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், தற்போது முதன்மைப் பாத்திரத்தில் நடித்து `லெனின் பாண்டியன்' படம் வெளியானது. இப்படம் தொடர்பாக கங்கை அமரன் அளித்த பேட்டி ஒன்றில், ’வெங்கட்பிரபுவின் அடுத்த படம் ஏன் தாமதமாகிறது’ என்பது குறித்து கூறிய விஷயம் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
அந்தப் பேட்டியில் "வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தள்ளிப்போனதற்குக் காரணம், ஒரு ப்ராஜெக்ட்டை நம்பியிருந்ததுதான். அந்த நடிகர் யாரென்று சொல்லி அவரைக் குறைசொல்ல விரும்பவில்லை, அவர்கள் வாழட்டும். கதை எல்லாம் தயார் செய்து, கால்ஷீட்டும் அளித்தார்கள். அமெரிக்க சென்று படத்துக்கான பணிகளையும் செய்துவிட்டார்கள். இடையில் அந்த நடிகரின் திரைப்படம் ஒன்று ஹிட்டான பிறகு, ’அந்த இயக்குநருடன் இரண்டு திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு அதன் பின்தான் வருவேன்’ எனச் சொல்லி இருக்கிறார்.
இந்த விவரங்களை பிரபுவிற்கு அனுப்பி, ‘உனக்கு இதெல்லாம் உண்மையிலேயே தேவையா? அந்த நடிகர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், உனது படத்தில் அவரை நடிக்கவைக்க நீ இந்த அளவிற்குச் சென்று அவரிடம் கெஞ்ச வேண்டுமா? இது நம் குடும்பத்திற்கு அவமானம் இல்லையா? அவர் உன்னைப் புறக்கணிக்கிறார், எனவே நீயும் அவரைப் புறக்கணித்துவிட்டு, அவரது படத்தை எடுக்கக் கூடாது' என்று கூறினேன்" எனக் கூறி இருந்தார் கங்கை அமரன்.
வெங்கட்பிரபு சத்ய ஜோதி நிறுவன தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக இருந்தது. எனவே சிவகார்த்திகேயனை குறிப்பிட்டுத்தான் கங்கை அமரன் பேசி இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். கூடவே, சில மாதங்கள் முன்பு சத்யஜோதி தியாகராஜன் அளித்த பேட்டியில் வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் படம் பற்றி கேட்கப்பட்ட போது, ’’வெங்கட்பிரபு சொன்ன கதையில் இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டி இருக்கிறது. அதனால்தான் படம் இன்னும் அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை. ஆனால் இந்தப் படம் இப்போதுவரை எங்கள் திட்டத்தில் உள்ளது” எனக் கூறி இருந்தார் தியாகராஜன். இந்நிலையில் கங்கை அமரனின் பேட்டி வந்து அந்தப் படம் நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

