Blackmail movie review
BlackmailG V Prakash Kumar

பரபரப்பான த்ரில்லர் படமாக ஈர்த்ததா `ப்ளாக்மெயில்'? | Blackmail | G V Prakash Kumar | Mu Maran

`இரவுக்கு ஆயிரம் கண்கள்', `கண்ணை நம்பாதே' போன்ற படங்களில் த்ரில் காட்டிய மு மாறன், இம்முறை ஓரு கடத்தலை வைத்துக் கொண்டு த்ரில்லர் கண்ணாமுச்சி ஆடுகிறார். அடுத்தடுத்து பல திருப்பங்களை கொடுத்து படத்தை சுவாரஸ்யமாக கொடுக்கவும் முயலுகிறார்.
Published on
பரபரப்பான த்ரில்லர் படமாக ஈர்த்ததா `ப்ளாக்மெயில்'? (1.5 / 5)

ஒரு குற்றச்சம்பவம், அடுத்தடுத்த குற்றங்களுக்கு எப்படி காரணமாகிறது என்பதே `ப்ளாக்மெயில்'

குடும்பத்துடன் ஊட்டி ட்ரிப் செல்கிறார் தொழிலதிபர் அஷோக் (ஸ்ரீகாந்த்), வழியில் அவர் குழந்தை காணாமல் போகிறது. தொலைந்த குழந்தையை கடத்தி வைத்திருப்பதாக மிரட்டி பணம் கேட்கிறார்கள். இன்னொரு பக்கம் 50 லட்சம் மதிப்புள்ள சப்பளை மணி (ஜி வி பிரகாஷ்) கையில் இருந்து திருடு போனதால், அவரின் காதலி அர்ச்சனா (தேஜூ அஸ்வினி) முதலாளியால் கடத்தப்படுகிறார். அவரை விடுவிக்க தொலைத்த சரக்கிற்கான பணத்தை கொடுக்க சொல்கிறார். கடத்தப்பட்ட குழந்தை கிடைத்ததா? மணி தன் காதலியை மீட்டாரா? இந்த இரு சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதெல்லாம் தான் ப்ளாக்மெயில் படத்தின் மீதிக்கதை.

`இரவுக்கு ஆயிரம் கண்கள்', `கண்ணை நம்பாதே' போன்ற படங்களில் த்ரில் காட்டிய மு மாறன், இம்முறை ஓரு கடத்தலை வைத்துக் கொண்டு த்ரில்லர் கண்ணாமுச்சி ஆடுகிறார். அடுத்தடுத்து பல திருப்பங்களை கொடுத்து படத்தை சுவாரஸ்யமாக கொடுக்கவும் முயலுகிறார். 

Blackmail
BlackmailG V Prakash, Srikanth, Bindhu Madhavi, Teju Ashwini

ஜிவி பிரகாஷ்குமார் வழக்கம் போல பெரிதாக சலனமற்ற ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். தீவிரமான காட்சிகளில் மிரள்வதையோ, பதற்றமாவதையோ பார்க்க முடியவில்லை. அவரது வழக்கமான மீட்டர் என்னவோ அதுவே இதிலும் தொடர்கிறது. குழந்தையை தொலைத்த அப்பாவாக ஸ்ரீகாந்த், பதறுவது, கோபப்படுவது, சந்தேகப்படுவது என பல உணர்வுகளில் தவிக்கிறார். குழந்தையின் அம்மாவாக பிந்து மாதவி ஒரு பக்கம் முன்னாள் காதலன் தொல்லைகளில் சிக்கி தவிப்பது, இன்னொரு பக்கம் குழந்தையை தேடி அலைவது என கவனிக்க வைக்கிறார். ரமேஷ் திலக் இயல்பான நடிப்பை தருகிறார், ஆனால் செயற்கையான அவரது தாடி பல காட்சிகளில் உறுத்துகிறது. தேஜூ அஷ்வினிக்கு குறைவான காட்சிகளே, ஆனால் வரும் காட்சிகளில் குறையேதும் இல்லை. ரெடின் கிங்ஸ்லி காமெடியும், முத்துக்குமார், லிங்காவின் வில்லத்தனமும் ஒன்றுதான். இரண்டுமே படத்தில் வேலைக்கு ஆகவில்லை.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு இரவு பகலாக நகரும் கதையை இயல்பாக காட்சிப்படுத்துகிறது. சாம் சி எஸ் பின்னணி இசை, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு போன்றவை படத்தை எப்படியாவது தேற்ற வேண்டும் என உழைத்திருக்கிறது. 

Blackmail
BlackmailG V Prakash, Srikanth, Bindhu Madhavi

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், வசதிக்கு ஏற்ப எழுத்தப்பட்டிருக்கும் விதம். ஒரு குற்றச் செயலில் நடக்கும் பிழை, அதன் மூலம் ஒரு ரிப்பில் எஃபக்ட் போல பல்வேறு குற்றங்கள் நடக்கும் விதமாக கதை நகர்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவை கொஞ்சம் நம்ப முடியாத படி, அநியாயத்துக்கு செயற்கையாக இருக்கிறது. குழந்தையை கடத்தியது யார் என்பதில் வரும் ஒவ்வொரு திருப்பமும் சிரிப்பு தான் வரவழைக்கிறது. ரிங் பால் போல ஆளாளுக்கு குழந்தையை கேட்ச் பிடித்து, கடத்தி செல்வதெல்லாம் சுந்தர் சி பட காமெடி க்ளைமாக்ஸ். அதை சீரியஸாக ஒரு படமாய் மாற்றி இருப்பது ஓவர் பாஸ். சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்க தெரியாமல் தடுமாறுவது படம் முழுக்க தெரிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில். இதனால் படம் நாம் மிக எளிதில் யூகிக்கும் வகையிலும் மாறுகிறது.

மொத்தத்தில் சுவாரஸ்யமற்ற திருப்பங்கள் கொண்ட சுமாரான த்ரில்லராக முடிகிறது `ப்ளாக்மெயில்'

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com