”சிவகார்த்திகேயன் முதல் நயன்தாரா வரை” - பர்சனல் புகைப்படக்காரர் சிரில் பேட்டி

”சிவகார்த்திகேயன் முதல் நயன்தாரா வரை” - பர்சனல் புகைப்படக்காரர் சிரில் பேட்டி
”சிவகார்த்திகேயன் முதல் நயன்தாரா வரை”  - பர்சனல் புகைப்படக்காரர் சிரில் பேட்டி

போட்டோகிராபி என்பது இன்று பலருக்கு ஹாபியை தாண்டி பேஷனாக மாறியிருக்கிறது. புகைப்படங்களின் மீது கொண்ட காதலால் முதலில் செல்போனில் கிளிக்கும் இளசுகள், அதன் தொடர்ச்சியாக DSLR-க்கு தாவி வெட்டிங், போட்டோ ஷூட் என்று அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் இதில் வெற்றியை நோக்கிச் செல்லும் போட்டோகிராபர்களின்  எண்ணிக்கை என்னோவோ மிகவும் குறைவுதான். காரணம், வெற்றிக்கு நாம் பிரேத்யமாக ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி தனது பிரேயத்யக ஐடியாக்களால் இன்று நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு பர்சனல் புகைப்படக்காரராக மாறியிருக்கிறார் புகைப்படக்காரர் சிரில்.

ஒரு மதிய வேளையில் அவரிடம் உரையாடினோம், “எனக்கு சொந்த ஊர் கல்பாக்கம். டிப்ளமோ சிவில் படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். போட்டோகிராபி பிடிக்கும் என்பதால் நான் பிரேத்யமாக வாங்கிய கேமாரா மூலம் புகைப்படங்களை எடுத்து வந்தேன். அப்போதுதான் விஜய் நடித்த ‘புலி’ பட இசை வெளியிட்டு விழாவில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படி தொடங்கியது எனது போட்டோகிராபி பயணம். அதன் பின்னர் வெட்டிங், தனியார் நிகழ்ச்சிகள் என ஓடிக்கொண்டிருந்த நான் அவ்வப்போது பிரபலங்களை போட்டோ எடுத்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன்.

ஒரு முறை சிவகார்த்திகேயனின் ரசிகர் திருமணவிழாவிற்கு புகைப்படம் எடுக்கச் சென்ற போது, செந்தில் என்பவரை சந்தித்தேன். அவர் மூலம் சிவகார்த்திகேயனின் நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் எனது புகைப்படங்களை காண்பித்து, சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை முன்வைத்தேன். அதன் பின்னர்தான் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்.

அப்படி ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு விஜயின் பெற்றோர் வந்தனர். அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் எழுந்து நின்றார். அவரை எஸ்.ஏ. சந்திரசேகர் எனது இரு கைகளாலும் பிடித்தார். அந்த மொமன்டை சரியாக கிளிக் செய்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தேன். அந்தப்புகைப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் அவரை புகைப்படம் எடுத்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய புகைப்படங்கள் அவருக்கு மிகவும் பிடித்துப்போக அவரின் பர்சனல் புகைப்படகாரராக மாறும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் குடும்பம் மிகப் பெரியது. அவர்கள் கூடும் விருந்து நிகழ்ச்சிகளில் போட்டோக்களை எடுத்தேன். 

அதன் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் அவரை கவர் செய்த எனக்கு, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் பூஜை படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னதாக, தனுஷ் நடித்த ‘பட்டாசு’ படத்திலும் அசிஸ்டெண்ட் புகைப்படக்காரராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

நயன்தாராவின் பர்சனல் புகைப்படகாரராக மாறியது எப்படி?

‘அறம்’ படம் வெற்றியை தொடர்ந்து, நயன்தாரா தியேட்டர் விசிட் செய்ய திட்டமிட்டார். அப்போது அவரின் உதவியாளர் லோகேஷ் என்பவர் மூலம் அதனை கவர் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நான் எடுத்த புகைப்படங்களை ஸ்பாட்டில் சமூகவலைதளங்களில் விரைவாக அப்லோடு செய்ததால், அந்தப் புகைப்படங்கள் வைரல் ஆனது.

அதே போல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா, மேடையில் நின்று கொண்டிருந்தார். திரையில் கிரண் பேடியின் புகைப்படம் இருந்தது. நான் லாங் ஷாட்டில் நின்று கொண்டிருந்தேன். அந்த மொமண்ட் அந்தக் கோணத்தில் கிளிக் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

கிளிக் செய்தேன். அந்தப் புகைப்படம் இன்று வரைக்கும் நயன்தாராவின் பேவரைட் புகைப்படமாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்துதான் அவரின் பர்சனல் புகைப்படங்களை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அவரின் குடும்ப நிகழ்ச்சிகளில் பலவற்றில் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். உறவுகளுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் என்னை ஆச்சரியப்படவைத்திருக்கிறது. என்னுடைய ஸ்பெஷல் மொமன்ட் கிளிக்கிங்தான். அதனால் பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் 1000 போட்டோவிற்கு மேலாக கிளிக் செய்திருக்கிறேன். அதில் பெஸ்டை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுப்பேன்.

ஏ.ஆர். ரஹ்மானை புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காக கிட்டத்தட்ட நான்கு வருடமாக காத்திருந்தேன். காத்திருப்பின் பலன் புனேவில் நடந்த ஒன் ஹார்ட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இளையராஜா 75 நிகழ்ச்சியிலும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் மேடைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். அதனைத்தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா அவரது மகளை மேடைக்கு அழைத்துச்சென்றார். அந்த மொமன்டில் எடுத்த புகைப்படம் தான் இது. அந்தப்புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா டிபி யாக வைத்திருந்தாக கேள்வி பட்டேன்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு விஜய் முதல் ஆளாக வந்தார். அவரை முதல் ஆளாக போட்டோ எடுத்து அப்லோடு செய்தேன்.  அந்தப் புகைப்படமும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

நான் சமூகவலைதளங்களில் பிரபலமானதற்கு இசையமைப்பாளர் அனிருத் முக்கிய காரணம். நான் அவரை எடுக்கும் புகைப்படங்களை அவர் பல நேரங்களில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து என்னை டேக் செய்வார். அதன் மூலம் எனக்கு பாலோயர்ஸ் அதிகமானார்கள்.

எனது பயணத்தில் பிரபல புகைப்படகாரர் ஜி. வெங்கட்ராம் உதவியாளர் நித்தின் பரத் மிக முக்கியமானவர். அவரிடம் இருந்துதான் பிரபலங்களை கையாளும் திறனை தெரிந்து கொண்டேன்” என்று கூறினார். மேலும் அவர் அளித்த சில பதில்கள்.. 

பிரபலங்களின் பர்சனல் புகைப்படகாரராக இருப்பது எந்த அளவுக்கு கடினம்?

உண்மையில் கடினம் தான். அவர்கள் தொடர்பான பர்சனல் புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பது அவசியம். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எடுக்கும் போட்டோக்களை உடனடியாக சமூகவலைதளங்களில் அப்லோடு செய்ய வேண்டும். இந்த இரு விஷயத்திலும் நான் மிகவும் கவனமாக இருப்பேன்.

உங்களிடம் பிரபலங்ளுக்கு மிகவும் பிடித்தது?

என்னுடைய அமைதிதான். அதிகமாக அவர்களிடம் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள மாட்டேன். அதே போல அவர்கள் சொன்ன உடன் போட்டோ எடுப்பதை நிறுத்தி ஓரமாக நின்று விடுவேன். என்னுடைய இந்த ஹேபிட் அவர்களுக்கு என் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.

உங்களின் தம்ப் ரூல் என்ன?

நானும் என்னுடைய பயணத்தை மற்றவர்கள் போல மிக சாதரணமாகத்தான் ஆரம்பித்தேன். என்னுடைய வேலையும், குணமும்தான் இன்று என்னை பிரபலங்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. அதை மெருகேற்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை நான் யாருக்கும் இலவசமாக வேலை செய்ததில்லை. இனிமேலும் செய்யப்போவதில்லை.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com