\
krishnaraj
krishnaraj PT

நலம் நலமறிய ஆவல்’ முதல் ‘அய்யய்யோ’ வரை! 90ஸ் நினைவுகளின் நாயகன் கிருஷ்ணராஜ் மறைவு!

90களின் இசை உலகில் தனித்துவம் கொண்ட குரல், கிருஷ்ணராஜ் மறைவு!
Published on: 

ஒரு பாடகரின் குரல்… ஒரு காலகட்டத்தையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்றால், அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் கிருஷ்ணராஜ். அவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார்.

90-களில் தேவாவின் இசையில் ஒலித்த பல பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணராஜ். கிராமிய மணம் கமழும் பாடல்களாக இருந்தாலும் சரி, காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, தனது தனித்துவமான குரலால் அவற்றுக்கு உயிரூட்டியவர். 300-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களில் குரல் கொடுத்த இவர், தனது இசைப் பயணத்தில் மறக்க முடியாத பல பாடல்களை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

krishnaraj
krishnaraj PT

சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் முறையான இசைப் பயிற்சியைப் பெற்ற இவர், சென்னை அரசு இசைக் கல்லூரியில் பயின்று சங்கீத வித்வான் பட்டத்தையும் சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றார். இசையமைப்பாளர் ஆர். ராமானுஜனிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு இருந்தது. அதன்பிறகு பின்னணிப் பாடகராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

தேவா இசையமைத்த அதிகாலை சுபவேளை திரைப்படத்தின் இடம்பெற்ற உன்ன நான் தொட்டதுக்கு பாடல் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜுக்கு, அடுத்தடுத்து பல படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.

கிருஷ்ணராஜின் குரல் ரசிகர்களிடம் பரவலாகச் சென்றதற்கு தேவாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் முக்கியக் காரணமாக அமைந்தன. அந்த வரிசையில் இன்றளவும் மிக முக்கியமான பாடலாக இருப்பது, சேரன் இயக்கத்தில் முரளி நடித்த `பொற்காலம்' திரைப்படத்தின் “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடல். கிராமிய இசை மணத்துடன் ஒலித்த இந்தப் பாடலுக்காக கிருஷ்ணராஜுக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்தது. அதே படத்தில் இடம்பெற்ற “சின்னக் கானாங்கருவி” பாடலும் அவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்று.

krishnaraj
krishnarajPT

அடுத்து, சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் நாட்டாம பாதம்பட்டா பாடலில் மலேசியா வாசுதேவன், சிந்து உடன் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார். அஜித் நடித்த `காதல் கோட்டை' படத்தின் நலம் நலமறிய ஆவல் பாடலின் எஸ் பி பி குரல் எவ்வளவு பிரபலமோ, அதே போல கிருஷ்ணராஜ் பாடிய நலம் நலமறிய ஆவல் பாடலும் பெரிய வரவேற்பை பெற்ற ஒன்று. நட்புக்காக திரைப்படத்தில் இடம்பெற்ற “கருடா கருடா”, காதலே நிம்மதி படத்தில் இடம்பெற்ற “வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி”, மூவேந்தர் படத்தின் “சோக்கு சுந்தரி” பாடலும் அவரது குரலில் ரசிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன.

கிருஷ்ணராஜ் பாடிய முக்கியமான பல பாடல்களின் அவருக்கு என தனி முத்திரை இருக்கும். அவை தான் ரசிகர்கள் அவரை கொண்டாடும் முக்கிய காரணம். மெலடியான பாடல்களோ, துள்ளலான கான பாடல்களோ அனைத்திலும் ஜொலித்தவர் கிருஷ்ணராஜ். எனவே தான் 80களின் இறுதியில் துவங்கிய அவரது பயணம் 2020 வரை நீடித்தது.

krishnaraj
krishnarajPT

அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற “அய்யய்யோ” பாடல், அவரது குரலை அடுத்த தலைமுறை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. அதேபோல், கழுகு திரைப்படத்தின் “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்” பாடலும் அவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

இறுதியாக சூர்யா நடித்த சூரரை போற்று படத்தில் நாலு நிமிஷம் என்ற பாடல் அவரது திரைப்பயணத்தில் இறுதிப்படலாக அமைந்தது. ஒரு பாடகர் என்பவர் பாடல்களைப் பாடிவிட்டுச் செல்பவர் மட்டுமல்ல; அந்தப் பாடல்களோடு சேர்ந்து ரசிகர்களின் நினைவுகளிலும் வாழ்பவர். அப்படி கிருஷ்ணராஜ் அவரதுபாடல்கள் மூலம் என்று வாழ்வார்.

krishnaraj
’பக்கத்து சீட்டுல பாட்டி உக்காந்தா..’ ஏஆர் ரஹ்மான் தமிழ், இந்தி பாடலை பாடிய யஷ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com