என்எல்சிக்கு ‘மாஸ்டர்’ படக்குழு கொடுக்கும் வாடகை எவ்வளவு தெரியுமா..?
‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்காக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயை படக்குழு நெய்வேலி என்எல்சிக்கு வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக படக்குழு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியின் சுரங்கப் பகுதிக்குள் சென்றுள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட சுமார் 200 பேர் கொண்ட படக் குழுவினர், கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி என்எல்சியின் சுரங்கப் பகுதிக்குள், பத்து நாள் படப்பிடிப்புக்காக சென்றுள்ளனர். அங்கு சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யை அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை நிறைவுற்ற நிலையில் இன்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நெய்வேலி என்எல்சி சுரங்கப் பகுதியில் படம் பிடிக்க படக்குழு நாள் ஒன்றுக்கு 25,000 ரூபாயை வாடகையாக வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து என்எல்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுரங்கப் பகுதி மிகப்பெரியது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தப் பகுதி விஜய்யின் படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் வாங்குகிறோம். ஆனால் இனிமேல் விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதாவது வணிக ரீதியிலான படப்படிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வரை வாடகை வாங்குவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
10 நாட்களுக்கு 2.5 லட்சம் தவிர, விருந்தினர் மாளிகை, நீர் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக படக் குழுவினர் தனித்தனியாக பணம் செலுத்துகின்றனர். விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்ற பின்னரும் படப்பிடிப்பு தொடர்ந்தது. என்எல்சியின் விதிமுறைகள்படி திரைப்பட படப்பிடிப்பிற்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வசூலிக்க வேண்டும். இது பின்னர் 10,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆவணப்படம், ஆய்வுகள் போன்ற வணிகமற்ற நோக்கங்களுக்காக எடுக்கப்படும் படப்பிடிப்புகளுக்கு எந்த தெளிவான விதிமுறைகளும் இல்லை. ஆனால் தற்போது தெளிவான கட்டண விளக்கப்படத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.