சிறகு முளைக்க வைக்கும் ‘Fly Away Home’: ‘சிறுமி - வாத்துகள்’ன் பாசப்போராட்டம்...!

சிறகு முளைக்க வைக்கும் ‘Fly Away Home’: ‘சிறுமி - வாத்துகள்’ன் பாசப்போராட்டம்...!
சிறகு முளைக்க வைக்கும் ‘Fly Away Home’:  ‘சிறுமி - வாத்துகள்’ன் பாசப்போராட்டம்...!

உலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே விதமான வாழ்க்கை முறையினை இயற்கை வழங்கவில்லை, அதிலும் ஒரே இனத்திற்குள் சம பலத்தில் எதையும் படைக்கவில்லை. ஒரு பறவை முட்டையிலிருந்து விடைபெற்றதும் பறக்கிறது. ஒரு பறவை சில நாட்களோ மாதமோ எடுத்துக் கொள்கிறது. மனிதர்களும் அப்படித்தான். எல்லா குழந்தையும் ஒரே வயதில் நடக்கத் துவங்கிவிடுமா, என்ன..? எத்தனையோ குழந்தைகள் நடை பயிலாமலேயே வாழ்ந்து முடிக்கின்றன. இங்கு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன தன் மகளை காட்டு வாத்துகளுடன் வானில் பறக்க வைக்கிறார் ஒரு தந்தை., அது தான் 1996ல் வெளியான Fly Away Home என்ற சினிமா.

நியூசிலாந்தில் நடக்கும் ஒரு சாலை விபத்தில் 13 வயது சிறுமி ’ஏமி’யும் அவளது தாயும் சிக்கிக் கொள்கிறார்கள். விபத்தில் தாய் இறந்து போகிறாள். ஏமியை அவளது தந்தை தாமஸ் தன் சொந்த நாடான கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஏமியின் தந்தையுடன் அவரது தோழி சூசனும் இருக்கிறாள். ஆரம்பத்தில் ஏமிக்கு அவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை. ஏமியின் தந்தை அவரது பண்ணை வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு இரும்புப் பட்டறை வைத்திருக்கிறார்.க்ளைடர் ரக விமானங்கள், பெரிய சிலைகள் செய்வதில் ஆர்வமுள்ள தாமஸ் தான் வடிவமைக்கும் க்ளைடர்களில் அவ்வவ்போது பறந்து சோதனை செய்வார். மகள் ஏமி, தந்தை தாமஸ் இருவரும் வசிக்கும் அவர்களது பண்ணை வீட்டின் அருகில் ஒரு குளமும், அதில் கனடா கூஸ் எனப்படும் காட்டு வாத்துகளும் இருக்கின்றன. அவை குளிர் காலத்தில் இனப் பெருக்கத்திற்காக கனடாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் வருகின்றன. ஒருநாள் அந்தக் குளம் இருக்குமிடத்தில் கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்காக வரும் ஆட்கள் மரங்களை வெட்டுகின்றனர். குளத்தில் விழும் மரங்களால் வாத்துகளின் வாழிடம் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி ஏமிக்கு சில வாத்து முட்டைகள் கிடைக்கின்றன. தாய்ப் பறவையின் உதவி இல்லாமல் குஞ்சு பொறிக்க ஏமி அவற்றை ஒரு மேசையினுள் வைத்து வெப்ப சூழலை உருவாக்க ஒரு மின்சார பல்ப்பினை எரியவிடுகிறாள். முட்டைகளை உடைத்துக் கொண்டு நாட்டு வாத்துகள் உலகிற்குள் நுழைகின்றன. வாத்துகளை பொருத்தவரை அவை முட்டையிலிருந்து வெளியே வந்ததும் யாரை தாய் என நம்புகிறதோ அவர்கள் பின்னாலேயே செல்லுமாம். அப்படி முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்சுகள் சிறுமி ஏமியை பின் தொடர்கின்றன. தாயை இழந்த ஏமி அந்த வாத்துகளுக்கு உணவளித்து தன் பிள்ளைகளைப் போல காக்கிறாள்.வாத்துகளுக்கு பறக்கும் பயிற்சி அளிப்பதற்காக தானும் தந்தை தாமஸுடன் சேர்ந்து க்ளைடர் இயக்கப் பழகிவிடுகிறாள்.

வாத்துகள் நடை ஓட்டம் என மெல்ல பழகிவருகின்றன. அதே வேளையில் இங்கு வீட்டிலிருக்கும் வாத்துகளை உள்ளூர் காட்டு இலாகா அதிகாரி வந்து திருடிச் சென்று அவர் பகுதியிலுள்ள கூட்டில் அடைக்கிறார். மறுநாள் ஏமியின் தந்தை தன் சகாக்களுடன் சென்று அவற்றை மீட்கிறார். குளிர் காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பிக்கப் போகும் நிலையில் வாத்துக்கள் இங்கிருந்தால் இறந்து விடும் என்பதால் அவைகளை மீண்டும் வடக்குப் பகுதிக்குப் பறந்தே அழைத்துச் செல்வது என முடிவு செய்கின்றனர் தந்தையும் மகளும்.போகும் வழியில் ஏமியின் தந்தை தாமசின் விமானம் விபத்துகுள்ளாகி சேதமடைகிறது. தாமஸ், ஏமியைத் தனியாக அவளுடைய விமானத்தில் புறப்படும் படியும் தான் சாலை வழியாக அங்கு வந்து சேர்வதாகவும் சொல்கிறார். அவள் வடக்குப் பகுதியை நோக்கி வாத்துகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறாள்.

இதற்கிடையில் வாத்துக்கள் போய் இறங்கவிருக்கும் வடக்குப் பகுதியிலுள்ள சரணாலயத்தை சிலர் கட்டிடங்கள் கட்டுவதற்காக தோண்டிக் கொண்டிருக்கின்றனர். மக்களும், பறவைகள் நல ஆர்வலர்களும் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏமி வாத்துகளுடன் பறந்து வரும் செய்தி மீடியாவில் பரவுகிறது. வானில் காட்டு வாத்துகளோடு ஏமி பறந்து வருகிறாள். கடல், நதி, மேகக் கூட்டம் இடையில் வேட்டைக்காரர்களின் தொந்தரவு என எல்லாம் கடந்து பறவைகளுடன் அவள் பறக்கிறாள். தாய் இழந்த சிறுமியும் தாய் இழந்த பறவைகளும் பெருவானில் சுதந்திரத்தோடு பறக்கின்றன.

பறவையை கண்டு விமானம் படைத்த மனிதனைக் கொண்டு பறவைகளை பறக்கப் பழக்கியதில் இயக்குனர் ’கரோல் பல்லார்டு’ ஒரு கவிதை போல இப்படத்தை உணரச் செய்கிறார். ஒளிப்பதிவாளர் ’கேலப் டெஸ்சேனலின் கேமரா சிறகு முளைத்து காட்சியின் வானில் பறக்கிறது. ஏமி இயக்கும் க்ளைடரை பின் தொடர்ந்து பறந்து சொந்த தேசம் அடைகின்றன பறவைகள். முதன் முதலில் தாமஸ், க்ளைடரில் பறக்கும் காட்சியும் அதற்கான இசையும் உங்களுக்கு சிறகு முளைக்கச் செய்யும். ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்றது இப்படம்.

’பில் லிஸ்மேன்’ எழுதிய சுயசரிதையினை தழுவி உருவாக்கப்பட்ட இந்த கனடா நாட்டு சினிமா உங்களை கூடுவிட்டுப் பறக்கச் செய்யும். பறத்தலின் இன்பத்தை பரவச மொழியில் உணரச்செய்யும். உங்கள் கூட்டிலிருந்து நீங்கள் விடைபெற வேண்டிய பருவம் ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும். இந்தப் படத்தை பார்க்கும் போது உங்கள் உடலின் இரு பக்கங்களையும் ஒரு முறை தடவிப் பார்த்துக் கொள்ளுங்கள்., சிறகுகள் முளைக்கும் சாத்தியங்கள் உண்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com