துபாய் விமானநிலையத்தில் 24 மணிநேரம் சிக்கித் தவித்த அதர்வா
நடிகர் அதர்வா, 24 மணிநேரத்திற்கும் மேலாக துபாய் விமானநிலையத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக துபாயில் கடுமையான மழை பெய்துக் கொண்டிருக்கிறது. சாலைகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்த மழையால் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் சில ரத்து செய்யப்பட்டும் உள்ளன. சில விமானங்கள் திருப்பி விடப்பட்டும் உள்ளன.
இந்நிலையில் இந்த மழையில் நடிகர் அதர்வா சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இயக்குநர் கண்ணன் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக அஸர்பைஜான் செல்ல இருந்தார். ஆனால் மழையினால் விமானங்கள் தடைபட்டன. ஆகவே அவர் அஸர்பைஜானுக்கு செல்லும் பயணத்தின் இடையே சிக்கினார். எங்கும் நகர முடியாததால் அவர் துபாய் விமானநிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்கி இருந்ததாக தெரிகிறது. ஆகவே ஓடுபாதைகளை சரி செய்யும் வரை அவர் காத்திருந்தார்.
இது குறித்து அவரது நெருங்கிய வட்டத்தினர் கூறும்போது “அதர்வா சனிக்கிழமையன்று சென்னையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு துபாய் சென்று அங்கிருந்து அஸர்பைஜான் செல்லும்படி விமானப் பயணச் சீட்டு போடப்பட்டது. கடுமையான மழையால் துபாய் விமான நிலையத்தின் ஓடுபாதை நீரில் மூழ்விட்டது. ஆகவே அவர் அடுத்த விமானத்தை பிடிப்பதற்காக துபாய் விமானநிலையத்திலேயே 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். அதைவிட்டால் வேறு வழியில்லை” என்றனர்.

