அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற கந்துவட்டி அன்புச்செழியன்!
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பைனான்சியர் அன்புச்செழியன் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அசோக்குமாரின் மரணம் தமிழக அளவில் புயாலாய் வீச அன்புச்செழியனுக்கு எதிரான எதிர்ப்பு வலுத்தது. அத்துடன் சினிமாத்துறையில் கந்துவட்டிக்கு கொடுமை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதையடுத்து போலீஸார் அன்புச்செழியனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புச்செழியன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இதுவரை அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அன்புச்செழியன் பங்கேற்றுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.