இந்தி திரைப்பட இயக்குனர் கல்பனா லட்சுமி மும்பையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 64.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இந்தியில் இயக்கி வந்தவர் கல்பனா லட்சுமி. ஷ்யாம் பெனகலிடம் உதவி இயக்குனராக இருந்து சினிமா கற்ற இவர், மறைந்த பிரபல இயக்குனர் குரு தத்தின் மருமகள். மாற்று சினிமா இயக்குனரான இவர் ஏக் பல், டாமன், ருடாலி, சிங்காரி உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.
ராஜ் பப்பர், டிம்பிள் கபாடியா நடிப்பில் இவர் இயக்கிய ’ருடாலி’ இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் இந்தியா சார்பில் வெளிநாட்டுப் பட பிரிவுக்காக 66-வது ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
இவர் கடைசியாக மிதுன் சக்கரவர்த்தி, சுஸ்மிதா சென் நடிப்பில் சிங்காரி என்ற படத்தை இயக்கியிருந்தார். 2006- ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், பூபென் ஹஸாரிகாவின் ‘தி பிராஸ்டிடியூட்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கிட்னி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது.