பிரபல திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவு.. திரையுலகம் இரங்கல்!
பிரபல திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவு
இந்தி திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகங்களைக் கொண்டிருந்த ஷியாம் பெனகல், இன்று மாலை 6:30 மணியளவில் காலமானார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 90 வயதான அவர் நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுமும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
’அங்கூர்’, ’மண்டி’, ’மந்தன்’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் இந்தி திரையுலகில் அறியப்பட்டவர், ஷியாம். இவற்றில் பெரும்பாலானவை 70 அல்லது 80களின் மத்தியில் வெளிவந்தவை ஆகும். இப்படங்கள், இந்திய சினிமாவின் ஒரு பகுதியாக அறியப்பட்டது.
கடந்த டிசம்பர் 14 அன்று ஷியாம், தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர்கள் குல்பூஷன் கர்பண்டா, நசிருதீன் ஷா, திவ்யா தத்தா, ஷபானா ஆஸ்மி, ரஜித் கபூர், அதுல் திவாரி , திரைப்பட தயாரிப்பாளர்-நடிகர் மற்றும் சஷி கபூரின் மகன் குணால் கபூர் மற்றும் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஷியாம் பெனகல்?
ஹைதராபாத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறந்த ஷியாம் பெனகல், கொங்கனி மொழி பேசும் சித்ராபூர் சரஸ்வத் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, ஸ்ரீதர் பி.பெனகல், கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் ஒரு புகைப்படக் கலைஞராக இருந்தார். அதுவே பெனகலை திரைப்படத் துறைக்குள் கொண்டுவர தூண்டியது. அவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு அவர் ஹைதராபாத் ஃபிலிம் சொசைட்டியையும் நிறுவினார். இது சினிமாவில் அவரது புகழ்பெற்ற பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 1976இல் பத்மஸ்ரீ விருதையும் 1991இல் பத்ம பூஷன் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
ஷியால் பெனகல் இயக்கத்தில் உருவான அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட 7 படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர். வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்திய திரைப்படத்துறையை உலக அளவில் கொண்டு சென்ற மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷியாம் பெனகல். இவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.