“முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலர வேண்டும்”- திரைத்துறையினர் இரங்கல்

“முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலர வேண்டும்”- திரைத்துறையினர் இரங்கல்
“முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலர வேண்டும்”- திரைத்துறையினர் இரங்கல்

பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான மகேந்திரனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர்‌ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. மகேந்திரனின் உடல் தற்போது சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி அளவில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு, திரையுலகினர் உள்ளிட்‌ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்‌ இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னணி இயக்குநரான மகேந்திரனின் மறைவு செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது, அவரும் அவரது திரைப்படங்களும் எங்கள் இதயத்தில்‌ என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது‌ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலர வேண்டும். உதிரிப்பூக்கள் எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூ. உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள். நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக மனக்கண்ணில் வந்துபோகிறது எ‌ன இயக்குநரும் நடிகருமான சேரன் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்‌.

இயக்குநரும் நடி‌கருமான பார்த்திபன், முள்ளும் மலரும் மரணம்? இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்'!!! பலரின் மரணம் வருத்தமளிக்கும், சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு.‌ ஆனால்‌ மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது! என்று பதிவிட்டுள்ளார்.

மகேந்திரன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

எனது வழிகாட்டியான மகேந்திரன் உண்மையான சினிமாவுக்கான பாதைக்கு வழிகாட்டியவர் என நடிகை சுஹாசினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் இலக்கியப் பூ உதிர்ந்து விட்டது என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com