ஓடிடி திரைப் பார்வை: ASTU - குழந்தையாக மாறும் முதியவர்... 'ஆகையால் அப்படியே இருங்கள்!'
தன் முதுமைக் காலத்தில் ஒவ்வொன்றாக அனைத்தையும் மறந்து குழந்தையாகும் ஒரு முதியவர் குறித்த மராத்திய மொழி சினிமாதான் அஸ்து (ASTU). முதுமை, மறதி, நோய் எனச் சுருக்கிவிடாமல் இப்படத்தை ஒரு தத்துவார்த்த சினிமாவாக கையாண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள் சுமித்ரா பாவேவும் சுகேதரும்.
குழந்தைப் பருவத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தின் மீதும் கேள்வி எழுப்புவோம். “அப்பா, நிலா ஏன் வொயிட்டா இருக்கு...?”, “அம்மா, யானை ஏன் கருப்பா இருக்கு” எனத் துவங்கி பல விஷயங்களை கேட்டுக் கொண்டே இருப்போம். அதுபோலவே பல விஷயங்களைப் பார்த்து ஆச்சர்யமடைவோம். ஊறும் எறும்பு, தாவும் தவளை, பாயும் நதி, பறக்கும் பட்டம் எனசொல்லிக் கொண்டே போகலாம். பிறகு ஒரு வயதில் வாழ்க்கையின் நீள அகலங்கள் புரியவே மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புவோம்.
நாம் கற்றுக் கொண்ட யாவையும் மீண்டும் முதுமையில் ஒவ்வொன்றாக மறப்போம். ஞாபகமறதியால் மீண்டும் குழந்தையாவோம். படுக்கையில் சிறுநீர் கழிப்போம். சமயங்களில் தான் யார், தன் பெயரென்ன என்பதைக் கூட மறப்போம். தெரியாத தெருவிலிருந்து தன் வீட்டிற்குப் போகவே பாதை தெரியாமல் தடுமறுவோம்.
எப்படிப் பாருங்கள்... வாழ்க்கை ஒரு வட்டம். குழந்தையிலிருந்து குழந்தையாக மாறும் இந்த சின்ன வாழ்வில் தான் நீங்கள் அத்தனை வன்மங்களைச் சுமந்து அலைகிறீர்கள். எத்தனை துரோகத்தைச் செய்கிறீர்கள், தாங்கி நிற்கிறீர்கள். இப்படியாக தன் முதுமைக் காலத்தில் ஒவ்வொன்றாக அனைத்தையும் மறந்து குழந்தையாகும் ஒரு முதியவர் குறித்த மராத்திய மொழி சினிமாதான் அஸ்து (ASTU).
ஓய்வு பெற்ற சமஸ்கிருத ஆசிரியர் சக்கரபாணி சாஸ்திரி. தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் திருமணமாகாத தனது மகனின் கவனிப்பில் வாழ்கிறார். மகனுக்கு பரீட்சை நாள்கள் வருவதால் சக்கரபாணியை திருமணமான அவரது மகள் இரா தன் வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறாள். மெதுவாக தன் நியாபகங்களை இழக்கும் வயதிலும் நோயில் ஆட்பட்டிருக்கும் சக்கரபாணி காரில் அமர்ந்தபடி சாலைகளையும் வாகனங்களையும் குழந்தை போல ரசித்துக் கொண்டிருக்கிறார். மகளிடம் ‘இது என்ன தெரு’ என்றெல்லாம் கூட கேள்விகள் எழுப்பியபடி இருக்கிறார்.
ஒரு பிஸியான மார்கெட்டில் காரை நிறுத்தும் மகள் இரா அப்பாவிடம் ‘அப்பா கார்லயே இருக்கணும். 5 நிமிசத்துல வந்திடுவேன்’ எனச் சொல்லி விட்டு கார்க் கதவுகளை அடைத்துவிட்டுப் போகிறாள். ஒரு சின்ன வேலையாக மார்க்கெட்டிற்குள் சென்று திரும்பும் போது காரில் தனது தந்தை சக்கரபாணி சாஸ்திரி காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைகிறார்.
இரா இல்லாத வேளையில் காரைக் கடந்த ஒரு யானையைப் பார்த்து பரவசமடைந்த வளர்ந்த குழந்தை சக்கராபாணி கையில் பாகனிடம் தன் கையில் இருந்த 500 ரூபாயை கொடுத்து தன்னையும் யானை மேல் அம்பாரி ஏற்றிக் கொள்ளச் சொல்கிறார். யானைப் பாகனோ ‘ஐயோ அப்பா நீங்க என்ன குழந்தையா..?’ என சிரித்துவிட்டு நடக்க யானையையும் பாகனையும் பின்தொடர்கிறார்.
வழிதவறிப் போகும் சகக்ரபாணியை ஒருபுறம் காவல் துறை உதவியுடன் மகளும் சக்கரபாணியின் மருமகனும் தேடுகிறார்கள். சக்ரபாணியோ யானை பார்க்கும் ஆசையில் பாகனைத் தொடர்ந்து போகிறார். பாகனும் அவரது 5 வயது மகளும் அவரை தெருவில் விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் தங்களது கூடாரத்திற்கே அழைத்துப் போகிறார்கள். அவரிடம் ‘உங்க வீடு எங்க இருக்கு, உங்க பேரு என்ன’ என எது கேட்டாலும் பதில் சொல்லத் தெரியவில்லை.
ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் கூடாரம் அமைத்து தங்கி இருக்கிறது பாகனின் குடும்பம். பாகனின் 5 வயது குழந்தையுடன் விளையாடுவது. பாகனும் அவரது மனைவியும் கொடுக்கும் உணவை உண்பது என நகர்கின்றன காட்சிகள். பாகனின் மனைவியும் ‘சரி விடுங்க அவரும் ஒரு பிள்ள மாதிரி நம்ம கூடவே இருக்கட்டும், நானே வளர்த்துக்கிறேன்’என்கிறாள். சக்கரபாணி யானை சவாரி செய்கிறார். பாகனின் மகளுடன் சிறுவன் போல விளையாடுகிறார். தரையில் ஊறும் எறும்பு பார்த்து விழிபிதுங்க ஆச்சர்யப்படுகிறார். இதற்கிடையில் சக்கரபாணி சாஸ்திரியின் மகளும் மருமகனும் போலீஸ் உதவியுடன் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் சக்கரபாணி கிடைத்தாரா..? இல்லையா..? அவர் மீண்டும் தன் வீட்டிற்குப் போனாரா என்பதே திரைக்கதை.
முதுமை, மறதி, நோய் எனச் சுருக்கிவிடாமல் இதனை ஒரு தத்துவார்த்த சினிமாவாக கையாண்டிருக்கிறார்கள் இதன் இயக்குநர்கள் சுமித்ரா பாவே மற்றும் சுகேதர். சக்கரபாணி தனக்கு உணவு தந்து பராமரிக்கும் பாகனின் மனைவியிடம் ஏதேதோ சமஸ்கிருத வேதங்களைச் சொல்லி உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். இந்த பிரபஞ்சம் குறித்தும், வாழ்வின் நிலையற்ற நிலை குறித்தும் தத்துவங்களைப் பேசுகிறார். சட்டென குழந்தையாகவும் மாறி விடுகிறார்.
தந்தையைத் தேடும் மகளோ அவர் வாழ்ந்த வீட்டில் அமந்து சில நிமிடங்கள் தன் அப்பாவின் முந்தைய நாள்கள் குறித்து நினைத்துப் பார்க்கிறார். அதில் அப்பா எவ்வளவு புத்திசாலித்தனமாக மாணவர்களுக்கு பாடம் எடுத்தார் என அப்பாவின் ஆசிரிய நாள்கள் குறித்து எண்ணி கண்கலங்குகிறார். இந்த ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒன்று முக்கியமானது அப்பா சக்கரபாணி தன் மகள் இராவிடம் சொல்கிறார்... “உனக்கு ஒரு ஜென் தத்துவவம் தெரியுமா...? இந்த நிமிடம் தான் உண்மை, முந்தைய நம் நாள்களில் நடந்தவற்றை மறப்பதே நல்லது. இனிவரும் நாள்கள் குறித்த சிந்தனையும் வேண்டாம். இந்த நிமிடம் இந்த கணம் மட்டுமே நிஜம்.”
அதற்கு மகள் இரா சொல்கிறாள்... “அப்போ வரலாறு என்ற ஒன்று கூட வேணாமே அப்பா, மனிதகுல வளர்ச்சியே இந்த நியாபகத் தொடர்ச்சி தானே...?” - இப்படியாக அப்பாவின் தத்துவ விளக்கத்திற்கு மகள் கொடுக்கும் பதில்களும், விவாதங்களும் என அந்தக் காட்சி திரையில் நிறைகிறது. ஆனால் அந்த நாள்கள் எல்லாம் முடிந்துவிட்டன. இப்போது சக்கரபாணி ஒரு வளர்ந்த குழந்தை அவர் தொலைந்தும் போய்விட்டார்.
மேலே சொன்ன காட்சியில் விவாதிக்கப்படும் தத்துவமே இக்கதையின் கருவும் கூட. சக்கரபாணி தன் ஞாபகங்களை எல்லாம் மறந்து தனதிந்த நாளில், தனதிந்த நிமிடத்தில் வாழ்கிறார். மீண்டும் குழந்தையானதன் மூலம் வாழ்க்கை வட்டத்தின் ஒரு சுற்றை நிறைவு செய்து மற்றொரு சுற்றிற்கு தயாராகிறார் அவர்.
இப்படத்தில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் யானை. யானையினை அறிவின் அடையாளமாக நாம் பார்க்கிறோம். அதிக நியாபக சக்தி கொண்ட விலங்காக யானை உள்ளது. இக்கதையில் மெதுவாக தனது நியாபகங்களை இழந்து குழந்தையாகும் முதியவர், யானையை பின் தொடர்கிறார். இது ஒரு நல்ல குறியீடு காட்சிக் கவிதை.
அப்பா டாக்டர் சக்கரபாணி சாஸ்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மோகன் அகஸ்தே. பக்குவமான ஆசிரியராக வரும் காட்சிகளிலும் சரி குழந்தை மனம் கொண்ட முதியவராக வரும் காட்சிகளிலும் சரி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மகள் இராவாக நடித்திருப்பவர் இராவது ஹர்ஸே. அப்பா காணாமல் போன பதற்றத்தை சிறப்பாக தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் இயக்குநர்கள் தவறவிட்ட இடம் என பல இடங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அப்பா காணாமல் போல செய்தியறிந்த மகன் பதற்றமே இல்லாம தன் அக்காவுடன் அமர்ந்து காபி குடிக்கிறார். இதுபோல இன்னுமே சில காட்சிகள் இப்படத்தில் உண்டு. சக்கரபாணியின் கதாபாத்திரம் வழியே தான் நம்பும் தத்துவமொன்றைச் சொல்ல நினைத்த இயக்குநர்கள் அடிப்படையில் ஒரு குடுப்பத்தில் ஒரு பெரியவர் காணாமல் போனால் அக்குடும்பத்தில் நிகழும் குழப்பத்தினை குடும்பத்தாரின் மனஓட்டத்தை சரியாக பதிவு செய்யாமல் தவற விட்டிருக்கிறார்கள். என்றாலும் அவசியம் ஒருமுறை பார்க்க வேண்டிய சினிமா இது. 2013ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ள இந்த சினிமா தற்போது அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது.
க்ரவுட் ஃபண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் மராத்தி மொழிப் படமாக இது அறியப்படுகிறது. மாற்று சினிமாக்கள் பெரும்பாலும் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்படுவதால் தொழில்நுட்பம் குறித்து நாம் பெரிதும் விவாதிக்க அவசியமில்லை. ஒரு கதை, அதன் தத்துவ அடர்த்தி, அது பார்வையாளனுக்குச் சொல்லும் நம்பகத்தனமான செய்தி இது தான் அஸ்து (ASTU) எனும் இந்த மராத்தி மொழி சினிமா.
அஸ்து என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘ஆகையால் அப்படியே இருங்கள்’ என்று பொருள் அந்தந்த நிமிடங்களில் அப்படியே வாழ்வது இதம். கடந்த கால இன்ப துன்பங்களை அசைபோட்டு மனதை கணப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு குழந்தை போல நிகழ்காலத்தில் மட்டுமே வாழத்தான் பலருக்கும் ஆசை ‘ஆகையால் அப்படியே இருங்கள்’.
- சத்யா சுப்ரமணி

