பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய ஃபெப்சி தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த மூன்று நாட்களாக ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஃபெஃப்சி தொழிலாளர்கள் இல்லாததால் ஏராளமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சங்கமும் ஃபெஃப்சியும் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமென மூத்த கலைஞன் என்ற முறையில் கேட்டுக் கொள்வதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஃபெப்சி தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புவதாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திரைப்படத் துறையை சார்ந்த கமல்ஹாசன், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதின் பேரில் போராட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்தார். நாளை முதல் பணிக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அவர், ஃபெஃப்சி சம்மேளனத்தை சேர்ந்த 23 தொழிலாளர் அமைப்புகளையும் பிளவுபடுத்தாமல் அனைவரையும் வைத்து வேலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நாளை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெஃப்சி சம்மேளன நிர்வாகிகள், அரசுத் தரப்பு நிர்வாகிகள் சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி கூறினார்.