படப்பிடிப்புகள் 12-வது நாளாக ரத்து: முடிவுக்கு வருகிறது ஸ்டிரைக்!
ஃபெப்சி வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, 12-வது நாளாக படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் (ஃபெப்சி) இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம். கடந்த முறை நியமித்த புதிய சம்பள விகிதம் குறித்து ’ஃபெப்சி’யில் உள்ள சில சங்கங்களுக்குள் பிரச்னை. இதையடுத்து படப்பிடிப்பில் அவர்கள் தன்னிச்சையாக சம்பளம் மற்றும் பேட்டாவை அதிகரித்து தருமாறு நிர்பந்தித்தார்கள். தரவில்லை என்றால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
சமீபத்தில், ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ’பில்லா பாண்டி’, பிரபுதேவா நடிக்கும் ’யங் மங் சங்’ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தினர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.
பெப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்ந்து நடப்பதால் படப்பிடிப்புகளுக்கு பிரச்னை ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் சிலர் புகார் கூறினர். இதையடுத்து இந்தப் பிரச்னை பற்றி பேசத் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் விஷால் தலைமையில் நடந்தது. அதில், பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல், மற்ற தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்தனர். இதை ஃபெப்சி அமைப்பு எதிர்த்தது. பின்னர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த 1-ம் தேதி அறிவித்தது.
இதன் காரணமாக, சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்து வந்த ரஜினிகாந்தின் காலா உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதன் அடுத்தக்கட்டமாக, தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வரும் டெக்னீஷியன் யூனியனை, ஃபெப்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்தது. இதை ஃபெப்சி ஏற்றுக்கொண்டு அந்த யூனியனை நீக்கியுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ’நின்று போன படப்பிடிப்புகளின் செட் ஒர்க்கை தொடங்க சொல்லிவிட்டோம். காலா, சண்டக்கோழி 2 படங்களில் செட் வேலைகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. படப்பிடிப்புகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கும்’ என்றார்.