வேலைநிறுத்தம் அறிவிப்பால் ஷூட்டிங் முடங்கும் அபாயம்
உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவுட்டோர் யூனிட் எனப்படும் வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள், இணையதள தொடர்கள் போன்றவற்றிற்கான படப்பிடிப்பு தற்போது அதிகளவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக வெளிப்புற படப்பிடிப்புக் குழு, தமிழ்நாடு தொழில்நுட்ப அமைப்பில் இருந்து தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், ஃபெப்சி எனப்படும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள சில தொழில்நுட்பக் கலைஞர்களின் அமைப்புகள், புதிதாக சேர்பவர்களிடம் 3 லட்சம் ரூபாய் செலுத்தி உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதற்காக, நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டபடாத நிலையில், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் 200க்கும் அதிகமான படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இணையதள தொடர்களின் படப்பிடிப்பு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிக்கலாம்: ‘98 கிலோ எடையை குறைத்ததும் புத்துணர்ச்சியானேன்’ - நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா