தந்தையை நினைத்து கண்கலங்கிய கார்த்தி.. உடனே சிவகுமார் செய்த செயல்.. அமைச்சர் கொடுத்த ரியாக்சன்!
கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், பிரபல நடிகரும், முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான சிவகுமார், அவரது மகன் நடிகர் கார்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
கண்கலங்கிய படி பேசிய நடிகர் கார்த்தி..
நடிகர் கார்த்தி, தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு இணையாக உள்ளதாகவும், தமிழகத்தில் உயர்தர கல்வி வழங்கப்படுவதாகவும் பெருமையுடன் கூறினார். அப்போது, தனது தந்தை சிவகுமாரின் சகோதரி இளமையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளிக்குச் செல்ல சிரமப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்து கண்ணீர் வடித்தார். இந்த உணர்ச்சிகரமான தருணத்தில், பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார். கார்த்தியின் கண்ணீரைக் கண்டு உருகிய சிவகுமார், அவரை ஆறுதல்படுத்தி அமரவைத்தார். இந்த நிகழ்வு அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் சிவகுமார், தனது சிறுவயது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆசிரியர்களைப் பார்த்து அவர்களைப் போல ஆக வேண்டும் என்று பாடங்களை மனப்பாடம் செய்து படித்ததாகவும், ஓவிய ஆசிரியராக வேண்டும் என்று ஓவியம் பயின்றதாகவும், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வசனங்களைக் கேட்டு திரையுலகில் நுழைந்ததாகவும் கூறினார். மேலும், கலைஞரின் வசனம் ஒன்றை மேடையில் நடித்துக் காட்டி, அது அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தெரியுமா என்று கேட்டு அரங்கை உற்சாகப்படுத்தினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களை ஒருவருடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர் என்றும் கூறினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், ஆனால் நிதி மட்டுமல்ல, நேர்மையும் ஒழுக்கமும் முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.