பாலிவுட் நடிகர் ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்

பாலிவுட் நடிகர் ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்
பாலிவுட் நடிகர் ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர் முதன்முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார். 

இவரை பாடவைத்து அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ‘ஃபர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார். அதே போல் நானும் ‘ராக் ஆன் ’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன்.  

அதற்கு அவர் எனக்கு விருப்பம் இருந்தாலும் எனக்கு தென்னிந்திய மொழிகளான தெலுங்கோ, தமிழோ சுத்தமாக தெரியாதே..? என்று பதிலளித்தார். அத்துடன் உங்களுக்கு என்னுடைய குரலின் இனிமை மீது நம்பிக்கை இருந்தால் நான் முயற்சி செய்கிறேன். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீக்கிவிடுங்கள் என்றார். அப்போது நான் அவரிடம் மொழி உச்சரிப்பு ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்தால் நீங்கள் தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டார்.

முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான ‘1 நேநோக்கடுனே’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஹூ ஆர் யு.’ என்ற பாடலைத்தான் ஃபர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு ’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஐ டோண்ட் நோ’ எனத் தொடங்கும் பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்தப் பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக் கொடுத்தார். 

இந்த பாடலை கேட்டவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. ஃபர்ஹான் அக்தர் எப்படி தெலுங்கு மொழியை கச்சிதமாக உச்சரித்து இனிமையாக பாடியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். இதுவே இந்த பாடலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது.  வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com