'இதுதான் பாலிவுட்டின் உண்மை முகம்' - புறக்கணிக்கச் சொல்லி ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாலிவுட் திரையுலகை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் தொழிலதிபரான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ் குந்த்ரா தான் முக்கியக் குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்திருந்தது.
மும்பை போலீஸ் கமிஷனர் தனது அறிக்கையில், ''குற்றப்பிரிவு காவல்துறையில் ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் சில செயலிகள் மூலம் வெளியிடுவது குறித்து பிப்ரவரி 2021-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக இருப்பதால் ராஜ் குந்த்ராவை நேற்று கைது செய்துள்ளோம். இதுகுறித்து எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் உமேஷ் என்ற நபர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்கள் தொடர்பாக ராஜ் குந்த்ராவிற்கும் உமேஷுக்கும் இடையில் பணப்பரிவர்த்தனை நடந்ததுள்ளன. இதுகுறித்து இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரில்தான் ராஜ் குந்த்ரா முக்கியக் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். இவர்கள் உருவாக்கும் ஆபாச வீடியோக்கள் சந்தா முறையில் இயங்கும் சில செயலிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, ராஜ் குந்த்ரா கைதை அடுத்து பாலிவுட் திரையுலகம் மீது ரசிகர்கள் கோபக்கனலை வீசத் தொடங்கியுள்ளனர். சில மாதங்கள் முன்புதான் இதே ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டி ஜோடி போதைப்பொருள் வழக்கில் மும்பை போலீஸாரால் விசாரிக்கப்பட்டனர். இதேபோல் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் போன்ற பல்வேறு காரணங்களை வெளிப்படுத்தி, பாலிவுட் திரையுலகை புறக்கணிக்க வேண்டும் என்று #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு வருகின்றனர்.
நிகிதா சிங் என்ற பயனர், ''ஆபாச வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இதே ஜோடியை மும்பை போதைப்பொருள் பிரிவு காவல்துறை விசாரித்தது. இப்போது பாலிவுட்டின் அழுக்கை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். கடவுள் பொருட்டு பாலிவுட் சினிமாவை பார்ப்பதை நிறுத்துங்கள்" என்றுள்ளார்.
இதேபோல் குஷானி என்ற பயனர், ''பாலிவுட் அம்பலமானது. சுஷாந்தின் தெய்வீக ஆன்மா இதை தினமும் செய்து வருகிறது. பாலிவுட்டில் பணத்திற்காக எதையும் செய்ய முடியும். அவர்கள் யாரையும் சுரண்டலாம். வயது எத்தனையாக இருந்தாலும் அவர்கள் யாரையும் கொடுமைப்படுத்தலாம். சுஷாந்தின் வார்த்தைகள் யதார்த்தமாகிவிட்டன. பாலிவுட் சரியத் தொடங்கிவிட்டது" என்று பதிவிட்டு இருக்கிறார்.
''போதைப்பொருள் வியாபாரம், பாலியல் அத்துமீறல்கள், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் கடத்தல், நெபோட்டிசம், கொலைகள், அண்டர் வேல்ர்டு கனெக்ஷன். இது பாலிவுட்டின் உண்மை முகம். பாலிவுட்டை புறக்கணியுங்கள்" என்று அரவிந்த என்பவர் பதிவிட்டுள்ளார். இப்படி பலர் பாலிவுட்டை புறக்கணிக்கச் சொல்லி பதிவிட்டு வருகின்றனர். இதனால் #BoycottBollywood ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.