ஆஸ்கர் வென்ற படமும் விஜய் படமும் ஒரே கதையா? - ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்

ஆஸ்கர் வென்ற படமும் விஜய் படமும் ஒரே கதையா? - ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்
ஆஸ்கர் வென்ற படமும் விஜய் படமும் ஒரே கதையா? - ட்விட்டரில்  ரசிகர்கள் உற்சாகம்

ஆஸ்கர் விருதை வென்ற ‘பாராசைட்’ படத்தின் கதை விஜய் நடித்த படத்தின் கதைதான் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு போட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த 92-வது ஆஸ்கர் விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றுது. அதில் சிறந்த திரைக்கதைக்கான விருதை கொரிய மொழியில் வெளியான ‘Parasite’ திரைப்படம் வென்றது. அத்துடன், சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் என மொத்தம் 4 விருதுகளை பாராசைட் திரைப்படம் தட்டிச் சென்றது. கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்த ‘பாராசைட்’ திரைப்படம் எதிர்பார்த்தபடியே ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

எது நடந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையைக் கொண்ட ஏழைக் குடும்பத்திற்கும், எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்யும் பெரும் பணக்காரக் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டை ‘பாராசைட்’ திரைப்படம் சித்தரித்தது. உலகத்திலுள்ள திரை ரசிகர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் ‘பாராசைட்’ படத்தைப் பற்றி பாராட்டிக் கொண்டிருக்க, தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களோ அவரது நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

அவரது ரசிகர் ராஜேஷ் கண்ணன் என்பவர், பாராசைட் திரைப்படமும் விஜய் நடித்த மின்சார கண்ணா படமும் ஒரே கதைதான் என்று ஒரு ட்வீட் போட்டார். அதனை அடுத்து இன்னொரு ரசிகர் ‘அது அல்ரெடி இங்க எடுத்தாச்சே.. மின்சார கண்ணா’ என்று பாராசைட் படம் குறித்து ட்வீட் செய்திருந்தார். உடனே தீயாக பற்றிக் கொண்டது ட்விட்டர் களம்.

‘மின்சார கண்ணா’ படத்தில் பணக்கார இளைஞராக (விஜய்) இருக்கும் நாயகன், தொழிலதிபர் (குஷ்பு) வீட்டில் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றுவார். காரணம் அந்த வீட்டுப் பெண்ணை விஜய் காதலிப்பார். அந்தக் காதலுக்காக அவர் இவ்வாறு வாழ்ந்து வருவார். பின்னர் நாயகன் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தொழிலதிபரான குஷ்பு வீட்டில் வேலை செய்வார்கள். அவர்கள் விஜய் தனது காதலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த வேலையைச் செய்வார்கள். காதலின் தியாகத்தை வேறு கோணத்தில் பேசிய இந்தப் படம் பெரிதும் வரவேற்கப்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜயின் ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையும், ‘பாராசைட்’ கதையும் ஒன்றுபோலவே இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆகவே தனது விருப்பமான நடிகரை பாராட்டவும் ஹாலிவுட் தரத்திற்கு ஒரு படத்தை தந்துவிட்டதாக கூறி ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.

1999 ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கண்ணா’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மோனிகா நடித்திருந்தார். மேலும் இதில், குஷ்பு, ரம்பா, கரண், மணிவண்ணன், மன்சூர் அலிகான் போன்றவர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இதனை கே.ஆர் கங்காதரன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com