வெளியானது வலிமை: தியேட்டர்கள் முன்பு மேள, தாள கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடித்த வலிமை படம் திரையரங்குகளில் வெளியானது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நீண்ட காத்திப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா கட்டுப்பாட்டால் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று வெளியான "வலிமை" படத்தை வரவேற்கும் வகையில் வேலூர் மாநககில் உள்ள அலங்கார் திரையரங்கு முன்பு உயரமான கட்டவுட்களை வைத்த அஜித் ரசிகர்கள், திரையரங்க வளாகத்தில் வலிமை படத்தில் வருவது போன்று பைக் ஸ்டெண்ட் செய்தும், தாரை தப்பட்டையுடனும் ஆட்டம் ஆடி வரவேற்றனர்.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் தேனி பெரியகுளம் பார்வதி திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் இரவு 2 மணி முதலே திரையரங்கம் முன்பு குவிந்தனர். திரையரங்கு முன்பு ஆட்டம் ஆடி,வெடி வெடித்து கொண்டாடினர். வலிமை திரையிடப்பட்ட பின்பு அஜித் ரசிகர்கள் திரளாக திரைப்படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் .வி.எம் மருது திரையரங்கில் வலிமை திரைப்படம் திரையிடப்படுகிறது. அதன் வெளியீட்டு காட்சி தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையரங்கு முன்பாக நவீன வண்ண எல்இடி விளக்குகள், ராட்சத திரையில் வலிமை படத்தின் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டது. அப்போது பலத்த கைதட்டலுக்கு இடையே ரசிகர்கள் தங்களது செல்போன்களில் டார்ச் லைட் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை திரையரங்கு உரிமையாளர் எம் .மருது பாண்டியன் மற்றும் எம்.வி.எம் குழுமத்தார்கள் செய்திருந்தனர். தியேட்டர் முன்பு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செண்டை மேளம் முழங்க ஆரவாரத்துடன் ரசிகர்கள் வலிமை படத்தை காண இரவு முதலே திரண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்குகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன. அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு ரசிகர் மன்றங்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர். அதிகாலையில் முதல் காட்சியாக ரசிகர்கள் ஷோ திரையிடப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகளில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் அஜித் ரசிகர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் வலிமை திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர்.