ஏர்போர்ட்டில் நடிகை தபுவை தொட பாய்ந்த ரசிகரால் பரபரப்பு!
ஜோத்பூர் விமான நிலையத்தில் நடிகை தபுவை ரசிகர் ஒருவர் தொட பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல இந்தி நட்சத்திரங்கள் சல்மான் கான், சைப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர், 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த இந்தி படம் ஒன்றில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் இரவு வேட்டைக்குச் சென்றனர். இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சல்மான்கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51 ன் கீழும், மற்றவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51 உடன் இணைந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149 ன் படியும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 20 ஆண்டுகளாக ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக, சல்மான் கான், தபு, சைப் அலிகான், சோனாலி ஆகியோர் மும்பையில் இருந்து நேற்று ஜோத்பூர் சென்றனர்.
அப்போது விமானத்தில் இருந்து இறங்கிய தபுவை, ரசிகர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். அவர் தபுவை தொடுவதற்காக வேகமாகப் பாய்ந்து சென்றார். அதற்குள் அவர் அருகில் நின்ற பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து அப்புறப்படுத்தினர். இதைக் கண்டு தபு அதிர்ச்சி அடைந்தார். ஆனால், இது தொடர்பாக புகார் எதுவும் அவர் கொடுக்கவில்லை.