அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’: மொட்டை தலை கெட்டப்பில் பார்வையாலேயே மிரட்டும் ஃபகத் ஃபாசில்
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலில் கெட்டப்பும் கதாபாத்திரத்தின் பெயரையும் அறிமுகப்படுத்தியுள்ளது படக்குழு.
’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என்பதால் ’புஷ்பா’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் ஃபகத் ஃபாசில் பிறந்தநாளன்று வில்லனாக நடிக்கிறார் என்று உறுதி செய்தது படக்குழு.
இந்த நிலையில், இன்று ஃபகத் ஃபாசிலின் மிரட்டல் கெட்டப்புடன் அவர் கதாபாத்திரத்தின் பெயரை அறிமுகப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் மொட்டைத் தலை தழும்புடன் வித்தியாசமான காவல்துறை கெட்டப்பில் இருளிலும் வெளிச்சத்திலும் நம்மை பார்க்கும் ஃபகத் ஃபாசிலின் கண்கள் மிரட்டுகிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.