’தவசி’ படத்திற்கு வசனம் எழுதியது சீமானா? முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் உதயசங்கர்! நடந்தது என்ன?

‘தவசி’ படத்திற்கு வசனம் எழுதியவர் யார் என்பதற்கு, அப்படத்தை இயக்கிய இயக்குநரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சீமான், உதயசங்கர்
சீமான், உதயசங்கர்ட்விட்டர்

தேமுதிக கட்சியின் நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம், சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்த பெருந்திரளாக குவிந்து வருவதால் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விஜயகாந்த் என்றால் துணிவுதான். அவருடைய ’தவசி’ படத்துக்கு நான்தான் வசனம் எழுதினேன். அப்போதுதான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை போல சிறந்த மனிதர் கிடைப்பது அரிது" என தெரிவித்தார்.

தவசி பட டைட்டில்
தவசி பட டைட்டில்

இதையடுத்து, 2001இல் வெளியான ‘தவசி’ திரைப்படத்திற்கு படத்தின் இயக்குநர் உதயசங்கர்தான் வசனம் எழுதினார் என்பதை, டைட்டில் கார்டில் வந்த காட்சியைப் படம் எடுத்து, வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்துனர். அதில், ’வசனம் - சீமான்’ என அத்திரைப்படத்தில் எங்குமே இல்லாததைச் சுட்டிக் காட்டி விமர்சித்தனர். தற்போது ‘தவசி’ படத்திற்கு வசனம் எழுதியவர் யார் என்பதற்கு, அப்படத்தை இயக்கிய இயக்குநரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து ’தவசி’ பட இயக்குநர் உதயசங்கர் YouTurn-க்கு பேசியுள்ள ஆடியோ ஒன்றில், “ ’தவசி’ படத்திற்கு வசனம் எழுதியவர் சீமான்தான். இயக்குநர் ஆவதற்கு அவர் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில், ’வசனம் என தனது பெயரைப் போட்டு எழுத்தாளராக்கிவிட்டால் இயக்குநர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்; அதனால் தனது பெயர் வேண்டாம்’ என சீமான் சொன்னார். மேலும், ’வசனம் என்று இல்லாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது.

ஆகையால் உங்கள் பெயரையே போட்டுக் கொள்ளுங்கள்’ என அவர் சொன்னார். அதன்படியே டைட்டிலில், வசனத்தில் எனது பெயர் இடம்பெற்றது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனத்தை வைத்துத்தான் ஷூட்டிங்கே சென்றோம். ஆகையால் அந்தப் படத்துக்கு அவர்தான் வசனம் எழுதினார். ஷூட்டிங்கின்போது மட்டும் அந்த வசனங்களில் சிறுசிறு மாற்றங்களைச் செய்துகொண்டோம். அவரது பெயரைப் போடாமல் விட்டால் நன்றாக இருக்காது என எண்ணி, ’நன்றி’ என்ற இடத்தில் அவரது பெயரைப் போட்டோம்” என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com