கொலை மிரட்டல் - சல்மான் கான் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

கொலை மிரட்டல் - சல்மான் கான் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
கொலை மிரட்டல் - சல்மான் கான் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களுடைய இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை "பாண்ட்ரா" பகுதியிலுள்ள சல்மான் கான் இல்லத்திற்குச் சென்ற  அதிகாரிகள் கொலை மிரட்டல் குறித்து விவரங்களை சேகரித்து, அங்கே பாதுகாப்பை பலப்படுத்த அதிக எண்ணிக்கையில் போலீசாரை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வலாவை போலவே சல்மான் கான் மற்றும் அவரது தந்தை படுகலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சலீம் கான் காலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, இந்த கடிதத்தை அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் கண்டதாக சல்மான் கான் தரப்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் GB மற்றும் LB எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GB என்பது கோல்டி பரார் என்கிற நிழலுலக தாதாவை குறிக்கும் என போலீசார் கருதுகிறார்கள். கனடாவிலிருந்து சட்ட விரோத நடவடிக்கைகளை பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்திவரும் தாதா கோல்டி பரார், பாடகர் சித்து மூஸ்வாலா கொலைவழக்கிலும் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.

கோல்டி பலமுறை பாடகர் சித்துவை மிரட்டி உள்ளார் எனவும், கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என எச்சரித்தார் எனவும் சொல்லப்படுகிறது. LB என்பது லாரன்ஸ் பிஷ்ணோய் என்கிற சிறையில் உள்ள தாதாவை குறிப்பதாக உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலும் பாடகர் சித்து படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் "விரைவிலேயே உங்களுக்கும் மூஸ்வாலாபோல நடக்கும்" என ஹிந்தியில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்ணோய் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவரை போலீசார் பாடகர் சித்து கொலைவழக்கில் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே ஒருமுறை லாரன்ஸ் பிஷ்ணோய் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளிவந்திருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் காட்டில் மான் வேட்டையாடிய குற்றத்தில் சல்மான் கான் விசாரணை வளையத்தில் இருந்தபோது, அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. பிஷ்ணோய் சமுதாயத்தினர் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில், வனங்கள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் மரபைப் பின்பற்றி வருகின்றனர். லாரன்ஸ் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com