20 வருடங்களாக படுத்த படுக்கையாக சிகிச்சை! உதவிக்கோரும் ‘என் உயிர்த் தோழன்’ பட பாபு!
பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கும் ’என் உயிர்த் தோழன்’ பட ஹீரோ பாபுவை, அப்படத்தை இயக்கிய பாரதிராஜா நேரில் சந்தித்தது தொடர்பான வீடியோ வெளியாகியிருக்கிறது. பாபு தற்போது திரைத்துறையினரின் உதவியை நாடி இருக்கிறார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘என் உயிர் தோழன்’ படத்தில், பாபு நடிகராக அறிமுகமனார். வசனகர்த்தாவும் இவரே எழுதினார் என்பது குறிப்பிடத்தகக்து. அரசியல் கட்சியின் அடிமட்டத்தொண்டராக நடித்திருந்தவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தில் இடம்பெறும் ‘குயிலு குப்பம், குயிலு குப்பம் கோபுரம் ஆனதென்ன’ பாடல் இப்போதும் கிராமங்களில் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்.
இளையராஜா இசையில் கங்கை அமரன் பாடல்களை எழுதினார். படமும் பாடலும் சூப்பர் ஹிட் அடித்ததால், பாபுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில், பாபு நடித்த ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்தில் நடித்தபோது சண்டைக்காட்சிக்காக மாடியில் இருந்து குதிக்கும்போது அடிப்பட்டு முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பாபு படுத்தப் படுக்கையாக சிகிச்சையில் இருந்து வருகிறார்.
தொடர்ச்சியான மருத்துவ செலவுகளால் வறுமையில் வாடும் அவரை, ’என் உயிர்த் தோழன்’ படத்தின் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் சந்தித்து கண்ணீருடன் ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ச்சியான தனது மருத்துவ செலவுகளுக்கு பாபு திரைத்துறையினரின் உதவியை நாடியிருக்கிறார். திரைத்துறையினர் கண்டுகொள்வார்களா?