இன்று முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: என்ன சொல்கிறார் விஷால்?

இன்று முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: என்ன சொல்கிறார் விஷால்?
இன்று முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: என்ன சொல்கிறார் விஷால்?

இரட்டை வரி விதிப்புக்கு எதிராக புதிய படங்கள் வெளியீடு இன்று முதல் நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் தமிழ் திரையுலகம், தற்போது கேளிக்கை வரி வடிவில் புதிய பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கும் கேளிக்கை வரி, திரையுலகை நலிவடையச் செய்யும் செயல் என திரை உலகினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இன்று முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறுகையில், பைரசி பிரச்னைகளால் தொடர்ந்து வியாபார ரீதியான பிரச்னைகளை திரையுலகம் சந்தித்து வரும் நிலையில், தமிழக அரசு திரையரங்க கட்டணத்திற்கு புதிய கேளிக்கை வரியை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த கேளிக்கை வரி கூடுதல் சுமை என, தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறினார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பால், தமிழில் இந்த வாரம் வெளியாக இருந்த விழித்திரு, களத்தூர் கிராமம் உள்ளிட்ட 6 படங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள 'சோலோ' திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவால், தமிழ்நாட்டில் மட்டும் இன்று ஒருநாளோடு திரையரங்குகளில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக சோலோ இயக்குநர் பிஜோய் நம்பியார் பதிவிட்டுள்ளார். இதேபோல், கலைஞர்கள் பலரும் வருத்தத்தை பதிவு செய்தாலும், தற்போது ‌பாதிப்பு ஏற்பட்டுள்ள படங்களுக்கு முன்னுரிமை தருவதாக தயாரிப்பாளர் சங்கம் உறுதியளித்திருப்பது நம்பிக்கையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பால், தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் சிக்கல் உருவாகியிருக்கிறது. அதனால், விரைந்து அரசு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முனைய வேண்டும் என திரையுலகினர் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com