‘என் ராசாவின் மனசிலே’ 2ஆம் பாகம் மூலம் இயக்குநராகும் ராஜ்கிரண் மகன்!
ராஜ்கிரண் மீனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி ராஜ்கிரண் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ சூப்பர் ஹிட் அடித்து வெள்ளி விழா படமாகி மீனாவுக்கும் ராஜ்கிரணையும் முன்னணி இடத்திற்கு கொண்டு வந்தது. இப்படத்தில்தான், நடிகர் வடிவேலு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். நடிகை மீனாவும் இப்படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையமைப்பில் அனைத்து பாடல்களும் இப்ப்போதும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளன.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருக்கிறார், நடிகர் ராஜ்கிரண் மகன் திப்பு சுல்தான். இதுகுறித்து ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்..."என் ராசாவின் மனசிலே" இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.