மலையாள சினிமாவில் அதிக வசூல்.. மஞ்சும்மல் பாய்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ’எம்புரான்’!
‘எம்புரான்’ திரைப்படம் உலக அளவில் 250 கோடி ருபாய்க்கு மேல் வசூலித்து அதிக வசூலைப் பெற்ற மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’, 2002 ஆம் ஆண்டில் நடந்த குஜராத் மதக் கலவரங்கள் தொடர்பான காட்சிகளுக்காக பாஜக மற்றும் சங் பரிவாரத்தினரின் எதிர்ப்பைப் பெற்றது. இதையடுத்து படக்குழுவினர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினர். இந்த சர்ச்சையைக் கடந்து ‘எம்புரான்’ படம் வசூலைக் குவித்துவருகிறது.
இந்தியாவில் மட்டும் 98 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது ’எம்புரான்’. கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 241 கோடி ரூபாய் வசூலித்திருந்ததே, ஒரு மலையாள திரைப்படத்தின் அதிகபட்ச வசூலாக இருந்துவந்தது. இந்த ஆண்டு மார்ச் 27 அன்று வெளியான ‘எம்புரான்’, 11 நாட்களில் 250 கோடி ருபாய் வசூலித்து ‘மஞ்சுமல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்துள்ளது.