எம்மி திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 67 வயது இயக்குநர் ஒருவர் தனது தோழியை மணக்க விரும்புவதாக மேடையில் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அமெரிக்காவில், சிறந்த தொலைக்காட்சி தொடர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி தொழில் நுட்ப மற்றும் பொறியியல் கலைஞர்களுக்கு எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டிற்கான விருதுகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது.
சிறந்த இயக்குநர் விருது பெற்ற 67 வயதான கிளென் வெயிஸ், விழாவில் பார்வையாளராக அமர்ந்திருந்த அவரது தோழியான ஜான் ஸ்வேண்டெனை திருமணம் செய்துகொள்வதாக மேடையில் அறிவித்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் பார்வையாளர்கள் முன்பாகவே தனது காதலை வெளிப்படுத்தி தோழிக்கு மோதிரம் அணிவித்தார்.