‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மீண்டும் இந்திய அரசியலை சர்ச்சைக்கு தள்ளிய நடாவ் லாபிட் கருத்து!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மீண்டும் இந்திய அரசியலை சர்ச்சைக்கு தள்ளிய நடாவ் லாபிட் கருத்து!
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மீண்டும் இந்திய அரசியலை சர்ச்சைக்கு தள்ளிய நடாவ் லாபிட் கருத்து!

கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குநர் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பிறர் கருத்துக்கள் என்ன... ? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்போம்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பட தேர்வு குழு மற்றும் விழா தலைவருமான நடாவ் லாபிட், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சாரப் பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றம் உண்மையான நிகழ்வாக இருந்தால், நான் வணங்கும் கடவுள் நடாவ் லாபிட்டுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும், இந்த அறிக்கை திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது போல எனக்கு தெரிகிறது. இதில் நடாவ் லாபிட் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார் என்பதை நினைக்கும் போது வெட்கக்கேடாக உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் படுகொலையின் துயரங்களை அவர் வேதனைப்படுத்தியுள்ளார். அவர் சுய திருப்திக்காக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று அனுபம் கேர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

அதேபோல இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடுவரின் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார். அதில், IFFI கோவாவில் நடுவர்கள் குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை நடாவ் லாபிட்டின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக , காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, லாபிட்டின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான நீதிக்கான ஒரு முக்கியமான பிரச்சினை, பிரச்சாரத்தின் பலிபீடத்தில் பலி கொடுக்கப்பட்டது. இது அவசியம் கேட்க வேண்டிய பகுதி" என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் , “ தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது உண்மைதான். ஒரு தரப்பினர் மற்றொரு கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ஒரு கட்சியும், அரசும் விளம்பரத்தில் மும்முரமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு காஷ்மீரில் அதிகபட்ச கொலைகள் நடந்தன. காஷ்மீர் பண்டிட்கள், பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷாத் கூறுகையில், "இது பாஜகவால் விளம்பரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம், உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு எந்த உண்மைத் தொடர்பும் இல்லை. இது ஒரு பிரச்சாரம்” என்று தெரிவித்துள்ளார்

பாஜக தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த சக நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் நடாவ் லாபிட்டின் விமர்சனத்திற்கு இஸ்ரேலின் தூதர் பதில் அளித்துள்ளார். நீண்ட காலமாக, மக்கள் படுகொலையை மறுத்து, பிரச்சாரம் என்று அழைத்தனர், தற்போது காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து சர்ச்சையாகும் கருத்தை போல” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com