துல்கர் சல்மானின் ’ஹே சினாமிகா’ ஷூட்டிங்கை விறுவிறுப்பாக முடித்த பிருந்தா மாஸ்டர்!
துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராய் நடிப்பில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்பதை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார். அவர், இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராய் நடிக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் அறிவிப்பு, இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விதிமுறைகளுடன் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியது அரசு.
இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பை துவக்கிய படக்குழு விறுவிறுவென்று தற்போது படத்தை முடித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் படங்களில் பிருந்தாதான் பெரும்பாலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுவார். அதேபோல, கடந்த 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே கண்மணி படத்திலும் பணியாற்றினார்.
அப்படத்தில், வரும் ‘ஹே சினாமிகா சீறும் சினாமிகா’ என்ற வைரமுத்து வரியில் கார்த்திக் பாடிய பாடல் இடம்பெறும். அப்பாடலின் முதல் வரியையே தனது படத்திற்கு தலைப்பாக வைத்ததோடு, அப்படத்தில் நடித்த துல்கர் சல்மானை ஹீரோவாக்கி தற்போது இயக்கி முடித்துள்ளார் பிருந்தா மாஸ்டர்.
ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.