"எதே த்ரிஷ்யம் 4-ஆ..." - ஜீத்து ஜோசப் சொன்ன அதிர்ச்சித் தகவல் | Drishyam 3 | Jeethu Joseph
இந்திய க்ரைம் த்ரில்லர் சினிமாக்களில் மிக புகழ்பெற்ற படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கி, மோகன்லால் நடித்து வெளியான த்ரிஷ்யம். இப்படத்தின் இரு பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள மலையாளப்படம் `Valathu Vashathe Kallan'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அதில் த்ரிஷ்யம் 3 பற்றியும், த்ரிஷ்யம் 4 வருமா என்பது பற்றியும் பேசி இருந்தார். ஜீத்து இது குறித்து பேசிய போது " `த்ரிஷ்யம் 3' ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து பாருங்கள். இது முதல் பாகம் போலவோ, இரண்டாம் பாகம் போலவோ இருக்காது. இதில் ஜார்ஜ் குட்டியின் உணர்வுகளின் வழியாக பயணித்திருக்கிறேன். அப்படியான ஒரு சினிமாவாகவே இருக்கும். எனவே பயங்கரமான எதிர்பார்ப்புடன் வந்தால் ஏமாற்றம் உண்டாகலாம். இது ஒரு நல்ல சினிமா என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுவேன். ஆனால், முந்தைய பாகங்களை ஒப்பிட்டால், அதற்கு என்ன சொல்வதென எனக்கு தெரியவில்லை.
இப்போது நான் சந்தித்து வரும் பிரச்னையும் அதுதான். இதிலும் (Valathu Vashathe Kallan) மெமரீஸ், த்ரிஷயத்தின் சாயல் இருக்கிறது என சொல்கிறார்கள். இது என்றில்லை எந்தப் படம் வந்தாலும் உடனே ஒப்பீட்டில் இறங்குகிறார்கள். `த்ரிஷ்யம்' படத்துக்கு முன்பு `மெமரீஸ்' வந்தது, இப்போது `த்ரிஷ்யம் 3' வரும் முன் இந்தப் படம் வந்திருக்கிறது என்ற சூழல் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே தான் பேட்டிகளில் எல்லாம் இதில் பெரிய திருப்பம் எதுவும் இருக்காது என கூறிவருகிறேன். எனவே, முன் முடிவுகள் இல்லாமல் வந்து படத்தை பாருங்கள். `த்ரிஷ்யம் 4' பற்றி நான் என் கனவில் கூட சிந்தித்ததில்லை. இதோடு முடித்துக் கொள்ளலாம் என்ற முயற்சியிலேயே இருக்கிறேன். மக்களும் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என சொல்ல தொடங்கிவிட்டனர்." என்றார்.

