`Women Oriented' படங்கள் என பிரிக்காதீர்கள்! - நடிகை பார்வதி | Parvathy
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பார்வதி. மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தற்போது இவர் அஜித் பால் இயக்கத்தில் STROM என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த சீரிஸ் தொடர்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் `Women Oriented' என்று படங்கள் பிரிக்கப்படுவது குறித்து பேசினார் பார்வதி. அது குறித்து அவர் கூறுகையில் "நாம் உருவாக்கும் படங்களில், பெண்களை மைப்படுத்திய படங்கள் என்று அதனை மட்டும் தனிமைப்படுத்தக் கூடாது. அது தான் என் கனவு, இறுதியாக அந்த நிலையை தான் அடைய வேண்டும். ஒன்பது வருடங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் எனக்கும் ஒரு பெண்ணியவாதி நண்பருக்கும் இடையே `Women Oriented' என்ற பதம் வேண்டுமா? வேண்டாமா? என்ற வாக்குவாதம் நடந்தது.
`Women Oriented' என சொல்வது அவசியம் என்று அவர் சொன்னார். நான் `அது இப்போதைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் இறுதியாக எல்லா கதைகளும் மனிதர்களை மையப்படுத்திய (Human Oriented) கதை என்று தான் சொல்லப்பட வேண்டும் என்றேன். அதில் பாலின அடையாளங்கள் இருக்கக்கூடாது. பெண்களின் கதைகள் மனிதர்களின் கதைகள் என்றும் பார்க்கப்படுவது இல்லை. அது சில காரணங்களுக்காக `ஹே அது பொண்ணுங்கள பத்தின படம். நம்ம கதை இல்லை' என்றுதான் பார்க்கப்படுகிறது. ஆண்களின் கதைகளை எப்படி பெண்களால் புரிந்து கொள்ள முடிகிறதோ, அதேபோல பெண்களின் கதைகளை ஆண்களாலும் புரிந்து கொள்ள முடியும். பாலின பேதம் தான் நம்மை பிரிக்கிறது." என்று கூறினார்.

