வளரும் பாடலாசிரியர்களை திரையுலகம் மதிப்பதில்லையா?
வளரும் திரைப்படப் பாடலாசிரியர்களை திரையுலகம் கண்டுகொள்வதில்லை என்கிற கருத்து தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.
பழைய திரைப்படப் பாடல்களை வெறும் கேளிக்கையாக மட்டுமே பார்த்துவிட்டு ஒதுங்கிச் சென்று விட முடியாது. அதில் வாழ்க்கைமுறையை மேம்படுத்தும் தத்துவங்கள் பொதிந்து கிடந்தன. அந்தப் பாடல்கள் சொல்லத் துடிக்கும் கதைகள் ஏராளம். அந்தப்பாடல்களின் இசையும் வரிகளும் ஆன்மாவை வருடிச் சென்றன. பாடலுக்கு உயிரளிப்பது இசையமைப்பாளர் எனில் அதை பேச வைப்பதில் பாடலாசிர்களின் திறமை மேம்பட்டு இருந்தது. அதனால்தான் அந்தக்கால பாடல் வரிகள் இப்போதும் இதயம் வருடுகின்றன. சோர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு உற்சாமளிக்கின்றன. வலிகளுக்கு மருந்தாய் அமைந்திருக்கின்றன. காரணம் அப்போதைய பாடலாசிரியர்கள் இலக்கியம் படித்தவர்களாக, மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்தவர்களாக, வலிகளை உணர்ந்தவர்களாக மக்களின் வாழ்க்கையை பாடல் வரிகளாக வடித்தனர். ஆனால், தற்போதைய பாடல்கள் வந்த வேகத்தில் காற்றில் கரைந்து விடுகின்றன.
ஏன் இப்போது திறமையான படைப்பாளிகள் இல்லையா? திறமையானவர்கள் இருந்தும், அவர்களை திரையுலகம் அரவணைப்பதில்லை என்கிறார்கள் வளரும் திரைப்படப் பாடலாசிரியர்கள்.
சோக்குசுந்தரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் ஜெயம் கொண்டான், தற்போதைய சினிமாவில் இலக்கியம் தெரிந்தவர்களை பயன்படுத்துவது அரிதாகி விட்டது. புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தியே பெரும்பாலான பாடல்கள் உருவாகி வருகிறது. இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்களே தவிர பாடல் வரிகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இலக்கியம் படித்து விட்டு முழுநேரமாக சினிமாவில் பாட்டெழுதும் நோக்கத்தில்தான் சென்னை வந்தேன். பத்து படங்களுக்கும் மேல் பாட்டெழுதி இருக்கிறேன். படம் தொடங்கும் வரை நிச்சயம் வாய்ப்புத் தருகிறேன் என வாக்குறுதி அளிப்பவர்கள், படம் தொடங்கிய உடன் கண்டுகொள்வதில்லை. அந்தப்படத்தில் நடிக்கும் ஹீரோக்களை பாட்டெழுத வைத்தால் அந்தப்பாடல் கவனம் பெறும் என்கிற ஸ்டண்ட் இப்போது உருவாகி இருக்கிறது. சில படங்களில் இயக்குநர்களே பாடல்களை எழுதுகின்றனர். அந்த வரிகள் வெறும் வார்த்தைகளாகவோ, அல்லது இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாசத்தை வார்த்தைகளாகவோதான் இருக்கின்றன. எதார்த்தத்துடன் கூடிய கவித்துமனான பாடல்களை அவர்களால் இயற்றி விட முடியாது என்பதை சமீபகாலமாக வெளிவரும் பாடல்களை கேட்டாலே உணரலாம். வருங்காலத்தைப் பேசும் படைப்பாளியாகவே இருந்தாலும் தான் வளர்ந்த சூழ்நிலைகளை முழுவதும் தவிர்த்து அவனால் எதுவும் இயற்றிவிட முடியாது. ஒரு கலைஞனின் படைப்பில் அவன் வாழும் சமூகக் கலாச்சார நிகழ்வுகள் பொதிந்திருக்கும். அவ்வாறான படைப்புகள் இதயத்திலிருந்து வெளிப்படும்போது அது உன்னதமாகிறது. அது காலத்தைக் கடந்து நிற்கும். நடிகர்களால் இறங்கி வந்து சமூகத்தின் நிலவரங்களை அறிய இயலாது. அவர்களால் மக்களின் வலியை துயரங்களை சமூகத்தின் மாற்றங்களை உணர முடியாது. ஆகையால் அவர்கள் எழுதும் பாடல்களில் உயிரோட்டம் இருக்க வாய்ப்பில்லை. ஒரு படத்திற்கு பாடல் என்பது இதயம் போன்றது. முன்பெல்லாம் படத்தின் கதையை ஒட்டியே பாடல்கள் அமைத்திருக்கும் ஆனால் தற்போதைய நிலை வேறு. படத்திற்கு பாடல்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. இதனால் தான் பழைய பாடல்களைப்போல தற்போதைய பாடல்கள் மனதில் நிற்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்றால் திறமையான மக்களின் வாழ்க்கையை, சமூகத்தை அறிந்த திறமையான வளரும் பாடலாசிரியர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அந்த நிலை என்று உருவாகிறோதோ அப்போது தான் உயிரோட்டமான திரைப்படப் பாடல்கள் உருவாகும்’ என்கிறார்.
செவ்வந்திப்பூவுக்கும் உள்ளிட்ட பாடல்களை எழுதிய தொல்காப்பியன் இதுகுறித்து கூறுகையில், தற்போதைய நிலையில் திரைப்படத்துறையில் பிரபலமான பாடலாசிரியர்கள் எழுதினால் மட்டுமே அந்தப்பாட்டு ஹிட் ஆகும் என நினைத்து திறமையான வளரும் பாடலாசிரியர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் திறமையான பாடலாசிரியர்களை ஒதுக்கி வைப்பதை நிறுத்த வேண்டும்’ என்று அவர் கூறுகிறார்.