“கெட்டவனுக்கு தட்டுல மரியாதையை வச்சு கொடுக்குதே உலகம்” - பற்றியெரியும் பிக் பாஸ் விவாதம்

“கெட்டவனுக்கு தட்டுல மரியாதையை வச்சு கொடுக்குதே உலகம்” - பற்றியெரியும் பிக் பாஸ் விவாதம்
“கெட்டவனுக்கு தட்டுல மரியாதையை வச்சு கொடுக்குதே உலகம்” - பற்றியெரியும் பிக் பாஸ் விவாதம்

என்றும் இல்லாத அளவிற்கு அதிக சர்ச்சைக்கு உள்ளான பிக் பாஸ் சீசன் 6 தமிழ் ஒருவழியாக ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. 15 வாரங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்று, அதில், அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய 3 பேரும் இறுதிக்களத்தில் நின்ற நிலையில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. இரவு 10 மணியளவில் இறுதி போட்டியாளர்களான விக்ரமன் மற்றும் அசீம், இருவரின் கைகளையும் இருபக்கம் பிடித்திருந்த மக்கள் பிரதிநிதியான கமல் ஹாசன், ஒருகட்டத்தில் அசீமின் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்தார்.

வெற்றிக்கோப்பையை முத்தமிட்ட அசீமிற்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையுடன், மாருதி சுசுகி கார் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றிக்களிப்பில் கத்தி ஆரவாரம் செய்த அசீம், எப்போதும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் தான் வீட்டிற்குள் நடந்துகொண்டதுபோல் வெளியே இருக்கும்போது ஒருபோதும் நடந்துகொண்டதில்லை என்றும் கூறினார்.

வெற்றி, மகிழ்ச்சி, ஆரவாரம் ஒருபுறம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தற்போது நெட்டிசன்கள் பதிவிடும் கருத்துகளிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்தோருக்கு மட்டுமல்ல; சமூக ஊடகங்களில் வெளியான ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்களே நிகழ்ச்சி பற்றிய புரிதலை பலருக்கும் கொடுத்திருக்கும். வெள்ளித்திரை பிரபலங்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் பிக் பாஸ் சீசன் இது என்பதாலேயே பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது எனலாம். ஆரம்பத்தில் ரக்‌ஷிதா, அமுதவாணன் மற்றும் ஜிபி முத்து போன்றோர் பலரின் விருப்ப போட்டியாளர்களாக இருந்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல போட்டிக்களம் மாறி சூடுபிடிக்க ஆரம்பித்தது.

தொடக்கத்திலிருந்தே தனது மோசமான நடத்தை மற்றும் தகாத பேச்சுக்களால் மக்களின் வெறுப்பு மற்றும் கோபத்துக்கு ஆளான அசீம், எப்படி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வென்றார்? என்பதுதான் தற்போது சமூக ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. சமூகத்திற்கு இது ஒரு மோசமான உதாரணம் என்றே சொல்லமுடியும்.

ஆரம்பத்திலிருந்தே சக போட்டியாளர்களிடம் அசீம் நடந்துகொண்ட விதம் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை தாக்கி பேசுதல் போன்ற நடத்தைகளுக்காக 15 முறை நாமினேட் செய்யப்பட்டார். இவர்தான் இந்த சீசனில் அதிகமுறை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டவர் என்ற பெயரையும் பெற்றார். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனுக்கு செல்வதும், அவருடைய நடத்தைகளை கமல் கண்டிப்பதும், அதற்கு அசீம் மன்னிப்பு கேட்பதுமே வார இறுதியில் வாடிக்கையாக இருந்தது. வாரத்தின் முதல் மூன்று நாட்கள் கோபமாக இருக்கும் அசீம் நான்காம் ஐந்தாம் நாட்களில் சமாதானமாகி இறுதி நாளில் மன்னிப்பு கேட்பார் என்று சக போட்டியாளர்களே கருத்துத் தெரிவித்தனர்.

சரி, அடுத்து ரன்னர் அப் வாங்கிய விக்ரமனுக்கு வருவோம். அரசியல் பின்புலம் கொண்ட விக்ரமன் ஆரம்பத்திலிருந்தே நேர்மையாகவும், அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் கருத்துகளை வலியுறுத்தி வந்தார். இதனால் சக போட்டியாளர்களால் சற்று தாழ்வாகவே பார்க்கப்பட்டார். மேலும் சக போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதம் மற்றும் அவர்களை கையாளும் விதம் மக்களுக்கு பிடித்துபோயிற்று. இதனாலேயே மக்களின் செல்வாக்கை பெற்றிருந்தார் விக்ரமன். இருப்பினும் அவருடைய நீதி, நேர்மை பேச்சுக்களால் சக போட்டியாளர்களால் 11 முறை நாமினேஷன் செய்யப்பட்டும் ஒருவழியாக இறுதிப்போட்டியாளரானார்.

திருநங்கை சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக பார்க்கப்பட்டார் ஷிவின். சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தாலும் பலரின் கிண்டல்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளானார் இவர். இருப்பினும் 10 வாரங்களுக்கும் மேலாக ஒருமுறை கூட நாமினேஷனுக்குள் வராத போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார் இவர். போட்டிகள் மட்டுமல்லாமல் வீட்டிற்குள் நடக்கும் பிரச்னைகளிலும் தலையிட்டு தனது நியாயமான கருத்துகளை முன்வைப்பதில் ஷிவின் எப்போதும் தவறியதில்லை என்றே சொல்லலாம். இதற்காகவே ஷிவினிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கடுமையான போட்டிக்கு மத்தியில்தான் ஃபைனலிட் ஆனார் இவர்.

சரி நாம் வெற்றிக்கோப்பைக்கு வருவோம். உலகை மறந்து ஒரே வீட்டிற்குள் இருக்கும் 21 பேரை மட்டுமே நம்பி அவர்களுடன் நூறு நாட்கள் பயணிக்கும் சக போட்டியாளர்களுக்கு எப்போதும் எதிர்மறை எண்ணங்களை விதைத்து, பிறரின் சுய மரியாதையை நிலைகுழைய செய்த ஒரு நபர் எவ்வாறு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்? என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. ஒரே தவறையே மீண்டும் மீண்டும் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்பதே நெட்டிசன்களின் கோபத்துக்கு காரணம்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்ல; வெளியேயும், ஷூட்டிங் ஸ்பாட்களிலும் சக நடிகர்களிடமும் இப்படித்தான் நடந்துகொள்வார் என அவருடைய நெருங்கிய வட்டாரங்களே பேட்டி கொடுத்திருந்தனர். குறிப்பாக ஒருவார இறுதியில் சக போட்டியாளர்களே அசீமின் நடத்தைக்காக அவருக்கு அதிக ரெட் கார்டுகளை கொடுத்தனர். திருநங்கை என்பதற்காக ஷிவினையும் அவர் கிண்டல் செய்திருந்தது குறிப்பித்தக்கது. மேலும், பிறருடைய தொழிலை அவமதித்ததற்காக கமலும் கண்டித்திருந்தார்.

இந்நிலையில் அசீமின் நடத்தையை சேனல் எப்படி இயல்பாக எடுத்துக்கொண்டது? அவருக்கு வெற்றிக்கோப்பை அளித்து கௌரவப்படுத்தியது எந்தவிதத்தில் நேர்மையானது? அசீமை வெற்றியாளராக அறிவித்ததில் என்ன மாதிரியான உதாரணத்தை சேனல் சமூகத்திற்கு அளித்திருக்கிறது? என்ற பல கேள்விகளே நெட்டிசன்களிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

விக்ரமன் வெற்றிக்கோப்பையை பெறுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய அரசியல் சித்தாந்தங்களே வெற்றிக்கோப்பையை நழுவவிட்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் ஆளுர் ஸ்ரீநிவாசா ஆகிய அரசியல் பிரபலங்களும் டிவிட்டரில் விக்ரமனுக்கு ஆதரவு கேட்டிருந்ததும் மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஷிவின் வெற்றிபெறாததற்கு என்ன காரணம்? திருநங்கை சமூகத்தின் பிரதிநிதியாக ஷிவின் இருக்கிறார் என விக்ரமனும் நிகழ்ச்சியில் ஒருமுறை பாராட்டியிருந்தார். அத்தனை முரண்பாடுகளையும் தாண்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஷிவின் வெற்றி பெற தகுதியற்றவரா? இது பாகுபாட்டை காட்டுவதை போன்றே தோன்றுகிறதல்லவா? அவர் வெற்றி பெற்றிருந்தால் முற்போக்கான போட்டியாக பலரின் மனதிலும் நின்றிருக்காதா பிக் பாஸ்? 

மக்கள் வாக்களித்தே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மோசடி நடப்பதாக பல வருடங்களாக வெளியாகி வரும் கருத்துக்களை இந்த சீசன் நிஜம் என்றே காட்டியிருக்கிறது என வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள். அதேசமயம் அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பை தவிர, பிக் பாஸை வைத்து நடத்தப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகளிலேயும் அசீம் மற்ற போட்டியாளர்களைவிட 3 மடங்கு அதிக வாக்குகளை பெற்றிருந்தார். அப்படியே வாக்குகள் உண்மையானதாக இருந்தாலும், அசீம் அதிக வாக்குகளை பெற்றிருந்தால் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? மக்களின் மனது என்ன யோசிக்கிறது? யாருக்கு ஆதரவு அளிக்கிறது? மற்ற உண்மையான போட்டியாளர்களை விட மீண்டும் மீண்டும் தவறான உதாரணமாக நிற்கும் போட்டியாளரை பாதுகாக்கும் அளவுக்கு மக்கள் இன்னும் பிற்போக்குத்தனமாக இருக்கிறார்களா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. 

நிகழ்ச்சியின் நீதியும் நேர்மையும் எங்கே? என்ற கேள்வியே எழுகிறது. அது தொலைந்துவிட்டதோ என்றே தோன்றுகிறது. 30 மில்லியன் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியான பிக் பாஸை தொகுத்து வழங்கினார் கமல் ஹாசன். தற்போது இது தவறான முன்னுதாரணமாக போய்விட்டது என்றே தோன்றுகிறது. குறிப்பாக வளர்ந்துவரும் இளம் சமூதாயத்தினர் மனதில் பிக் பாஸ் சீசன் 6 எதை விதைத்து சென்றிருக்கிறது? இங்கு இவர் ஏன் வெற்றிபெற்றார் என்ற கேள்வியைவிட வெற்றிபெற தகுதியானவர் வேறு யாரும் இல்லையா? என்பதே பலரின் ஆதங்கமாக பார்க்கப்படுகிறது. 

“ஒரு நல்லவனுக்கு கிடைக்குற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கிடைச்சுருதே... அது எப்படி? பொறுக்கி பயலுக்கு மரியாதைய தட்டுல வெச்சு கொடுக்குற இந்த ஊரு... இந்த உலகம்... ஆஆஆஆ” என்ற கமல்ஹாசனின் சென்டிமன்டான மகாநதி பட டயலாக் இங்கு எத்தனை பேருக்கு நினைவுக்கு வருகிறது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com