“அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” - போண்டாமணி இறப்புக்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 60.
bonda mani death
bonda mani deathPT

இலங்கையை பூர்விகமாக கொண்டவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. இவரது இயற்பெயர் கேதீஸ்வரன். நடிகர் பாக்கியராஜின் பவுனு பவுனுதான் என்ற திரைப்படம் மூலம் 1991-ஆம் ஆண்டு திரையுலகுக்கு இவர் அறிமுகமானார்.

"ஒன்னா இருக்க கத்துக்கணும்" என்ற திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் கவுண்டமணி இவர் மீது போண்டாவை தூக்கிவீசிய காட்சிகள் இருந்துள்ளன. இதன்பின்னர், போண்டாவுடன் கவுண்டமணியில் இருக்கும் மணியை சேர்த்து, தனது பெயரை போண்டா மணி என மாற்றியுள்ளார்.

திரையில் சில காட்சிகள் தோன்றினாலும், தனது உடல் மொழியால் சிரிக்க வைக்கும் திறமை கொண்ட கலைஞர் போண்டா மணி. நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

வின்னர், சுந்தரா டிராவல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் போண்டா மணி நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போதும் மீம் மெட்டீரியலாக உலா வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சில தொலைக்காட்சிதொடர்களிலும் நடித்த போண்டா மணிக்கு, 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சென்னை பொழிச்சலூரில் குடும்பத்துடன் அவர் வசித்து வந்த நிலையில், வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் போண்டா மணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போண்டாமணியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.

என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com