திரைப்படங்களில் வன்முறை காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறக் கோரிய மனு தள்ளுபடி!

திரைப்படங்களில் வன்முறை காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறக் கோரிய மனு தள்ளுபடி!
திரைப்படங்களில் வன்முறை காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறக் கோரிய மனு தள்ளுபடி!

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின்போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எந்த வித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அமைந்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது "இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டது", "சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் கலர் பவுடர் தான்" போன்ற வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, திரைப்பட காட்சிகளை பார்த்து தான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தக பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக மனுதாரர் தெரிவித்தார்.

இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மனுதாரர் கோபிகிருஷ்ணன் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com