”கதையோடு சமூக அரசியலையும் அழகாக சொல்கிறது” - இயக்குநர்கள் பாராட்டும் ’சார்பட்டா பரம்பரை’
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார், “சார்பட்டாபரம்பரை பா. ரஞ்சித்தின் மிகச்சிறப்பான படைப்பு. நுணுக்கமான கதாபாத்திர வடிவமைப்பு, கலை இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, சண்டைபயிற்சி என அத்துணையும் கூடி வந்திருக்கிறது. கடும் உழைப்பு. மிக சுவாரஸ்யமான வெற்றிப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
’மூடர்’ கூடம் இயக்குநர் நவீன், “எமர்ஜென்சி, மிசா, கழகத்தின் உண்மையான உடன்பிறப்பு, கைதுகள், ஆட்சிகலைப்பு, கட்சிமாறல்கள், மாட்டுக்கறி பிரியாணி... கதையின் ஓட்டத்தோடு சமூக அரசியலை அழகாக சொல்லும் லாவகம் மிக அழகு. செம்ம” என்று பாராட்டியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ், “சார்பட்டா பரம்பரை பார்த்தேன். ரோசமான மக்களின் ரோசமான வாழ்வியலை ஆக்ரோசமான கலையாக்கி பெரும் கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார் அண்ணண் பா.ரஞ்சித். அத்தனை உழைப்பு அத்தனை வியப்பு. வாழ்த்துக்கள் அண்ணா. சாத்தியபடுத்திய மொத்த படக்குழுவிற்கும் ப்ரியமும் அன்பும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
’மேயாத மான்’ படத்தின் இயக்குநரும் ‘மாஸ்டர்’ படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான ரத்னகுமார், “பரம்பரை ல என்னத்துக்கு டா மானத்த எடுத்துனு வந்து வெக்கிறீங்க. நல்லா ஆடுனா ஜெயிக்க போற.பா.ரஞ்சித்தின் அரசியலும், திரை ஆளுமையும் ஒவ்வொரு முறையும் சிலிர்க்க செய்கிறது” என்று பாராட்டியுள்ளார்.
’அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’, ’எனிமி’படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் “சார்பட்டா பரம்பரை படம் வியப்பாக இருந்தது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் அற்புதமான படைப்பு. பசுபதி, கலை, டார்லிங் ரோஸ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள்” என்று பாராட்டியுள்ளார். மேலும், இயக்குநர்கள் சக்தி செளந்தர்ராஜன், பிச்சுமணி, மோகன் ஜி உள்ளிட்டோரும் பாராட்டியிருக்கிறார்கள்.