‘அது ஒரு பொய் புகார்’- அன்றைய நாளில் அவர்என்னுடன் இருந்தார்.. நிவின்பாலிக்கு ஆதரவாக பேசிய இயக்குநர்!
ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து கேரளா சினிமாத்துறையில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நடிகர் நிவின்பாலி ஒரு பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு வழங்க உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸார் ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி பாலியல் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
பட வாய்ப்பு தருவதாக பாலியல் வன்கொடுமை..
நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, 2023-ம் ஆண்டு பட வாய்ப்பு வழங்குவதாக கூறி துபாய் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அறிக்கைகளின் படி புகாரளித்திருக்கும் பெண், திரைப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்து சென்று, 2023 நவம்பரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எர்ணாகுளத்தில் பெண் புகார் அளித்துள்ளார். நிவின் பாலி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றத்தில் நிவின் ஆறாவது குற்றவாளியாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்பட்ட திடீர் திருப்பம்..
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறுது நேரத்திலேயே அது குறித்து பதிலளித்திருந்த நிவின் பாலி, “ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு நான் ஆளாக்கியதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளதை கண்டேன். அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். அதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று கூறினார்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் நாளில் நிவின்பாலி கொச்சியில் இருந்ததாகவும், விடுதியில் தங்கியிருந்ததற்கான ரசீதும் வெளியிடப்பட்டது.
இதுஒருபுறம் இருக்க தற்போது நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேசியிருக்கும் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “பாலியல் குற்றாச்சாட்டு அளிக்கப்பட்ட டிசம்பர் 14, 2023 அன்று, நிவின் என்னுடன் 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படப்பிடிப்பில் இருந்தார். மறுநாள் (டிசம்பர் 15) அதிகாலை 3 மணி வரை என்னுடன்தான் இருந்தார். படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் உள்ள நியூக்ளியஸ் மாலில் இருந்தது. பெரும் கூட்டம் இருந்தது. பின்னர் ஷூட்டிங்கானது மதியம் க்ரவுன் பிளாசாவில் நடைபெற்றது. பிறகு அவர் கேரளாவில் 'ஃபார்மா' என்ற வெப் சீரிஸுக்குப் போனார்” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தன்மீது சுமத்தப்பட்ட போலி பாலியல் புகாருக்கு எதிராக நிவின்பாலி கேரள காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.