சின்னத்திரையில் தொடர் இயக்காதது ஏன்? விக்ரமன் விளக்கம்

சின்னத்திரையில் தொடர் இயக்காதது ஏன்? விக்ரமன் விளக்கம்

சின்னத்திரையில் தொடர் இயக்காதது ஏன்? விக்ரமன் விளக்கம்
Published on

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் வெப்சைட் துவக்கவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. 


இதில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலரை நாசர் வெளியிட, விக்ரமன் பெற்றார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சின்னத்திரை வெப்சைட்டை ஆர்.கே.செல்வமணி மற்றும் சிவன் ஸ்ரீநிவாசன் வெளியிட்டனர்.

விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘’சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அணுகுமுறை மற்றும் படைப்புரீதியாக மட்டும் தான் வித்தியாசம் உள்ளது. இன்னும் இவை இரண்டும் தனி தனியாக இருப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் பெரியதிரை மற்றும் சின்னத்திரை சங்கங்கள் ஒன்றாக வேண்டும். பாலிவுட் மற்றும் ஹாலிவுடில் பெரிய நடிகர்களும் கேமராமேன்களும் சின்னத்திரை தொடர்களில் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும்’’ என்றார்.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, ‘’ பத்தாண்டுகளுக்கு மேலாக என்னை பல பேர் சின்னதிரையில் தொடர் இயக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நான், ’கதை, திரைக்கதை, வசனத்தை மட்டும் நான் பண்ணுகிறேன், ஆனால் இயக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டேன். இப்போது பெரிய திரையில் படம் இயக்கி கொண்டு இருக்கிறேன். நாம் சீரியல் செய்தால் விமர்சனங்கள் வரும் என்று பார்த்தேன். ஒரு கட்டத்தில் சரி, ஒரு சீரியல் எடுத்துப்பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். என்ன பயம் என்றால் பெரியதிரையில் சாதித்ததை சின்னத்திரையில் செய்யமுடிவில்லை என்று இயக்குநர்கள் பேசுவார்கள். அதனால் பெரியதிரையிலும் சாதித்து சின்னத்திரையிலும் சாதித்த ஒருவரிடம் சென்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், ’இது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுலபம் கிடையாது. ஒரு மாதத்தில் முப்பது நாள் என்றால், அத்தனை நாளும் வேலை இருக்கும். உங்களுக்கு மட்டும் இல்லை. உங்கள் முழு குழுவிற்கும் எல்லா நாளும் வேலை இருக்கும்’ என்று சொன்னார். அப்போதுதான் புரிந்தது சின்னதிரையில் இருக்கும் கஷ்டங்கள். அதனால்தான், நான் கதை, திரைக்கதை, வசனம் மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினேன். இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்’ என்றார். 

முன்னதாக, சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி வரவேற்று பேசினார். 



 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com